அதிர்ஷ்டம் தரும் ஆனி மாத ராசிபலன்கள்,rasi palan

ஜோதிடம்

12 ராசிகளுக்குமான ஆனி மாத ராசிபலன்கள் இதோ,

மேஷம்

போராட்டங்களும், புரட்சிகரமான சிந்தனைகளும் உடைய நீங்கள், தன்னைப்போல் மற்றவர்களும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என நினைப்பீர்கள். கடந்த ஒரு மாதமாக 2ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு பணப்பற்றாக்குறையையும், முன்கோபத்தையும், ஏடாகூடமாகப் பேசுவதையும் கொடுத்து வந்த சூரியன் இந்த மாதம் முழுக்க 3ம் வீட்டில் அமர்வதால் தொட்டதெல்லாம் துலங்கும்.

தடைகளெல்லாம் நீங்கும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களும் உடனடியாக நிறைவேறும். வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு வேலை அமையும்.

விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும். ராசிநாதன் செவ்வாய் 10ம் வீட்டில் நிற்பதால் சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும்.

என்றாலும் கேதுவுடன் சேர்ந்திருப்பதால் உத்யோகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வந்து நீங்கும். குருபகவானும் உங்கள் ராசிக்கு 7ல் நின்றபடி உங்கள் ராசியை பார்ப்பதால் முகப்பொலிவு கூடும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். திடீர் யோகம், செல்வாக்கு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

மனைவிவழியில் ஆதாயமுண்டு. தடைபட்ட பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியுடன் பேசுவீர்கள். குடும்பத்திலும் நிம்மதி உண்டாகும். மனைவிவழியில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

சனிபகவான் 9ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு. மனைவிக்கு வேலை கிடைக்கும். தெளிவு பிறக்கும். தைரியமும் உண்டாகும். மரியாதைக் கூடும். உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்களும் நீங்கும்.

அரசியல்வாதிகளே! கட்சி தலைமை அதிசயிக்கும்படி சிலவற்றை செய்வீர்கள். மாணவர்களே! புது நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். நினைவாற்றல் கூடும்.

கன்னிப் பெண்களே! பழைய நண்பர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் கூடும்.

பழைய பாக்கிகளும் வசூலாகும். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க கடையை விரிவுப்படுத்துவீர்கள், அழகுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். ஆனால் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

உத்யோக ரகசியங்களை சொல்லித் தருவார்கள். சக ஊழியர்களுடன் சின்னச் சின்ன சச்சரவுகள் வரும் என்றாலும் அவர்களால் உதவிகள் உண்டு. சிலருக்கு புது வேலை கிடைக்கும். கலைத்துறையினரே! நல்ல வாய்ப்புகள் தேடி வரும். விவசாயிகளே! மகசூல் பெருகும். புதிதாக நிலம் கிரயம் செய்வீர்கள். சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூன் 15, 16, 21, 22, 23, 24, 30 மற்றும் ஜூலை 1, 2, 3, 4, 10, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூன் 25, 26, 27ம் தேதி நண்பகல் 12.07 மணி வரை.

ரிஷபம்

செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்கும் நீங்கள், தொடங்கிய வேலையை முடிக்கும் வரை ஓய மாட்டீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய வாகனத்தை தந்து விட்டு புதுசு வாங்குவீர்கள்.

பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கூடுதல் அறைக் கட்டுவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். கடந்த ஒரு மாத காலமாக உங்களுடைய ராசிக்குள் அமர்ந்து உங்களை பாடாய்படுத்திய சூரியன் இப்போது 2ம் வீட்டிற்குள் நுழைந்திருப்பதால் அரசு சம்பந்தப்பட்ட காரியங்களும் நல்ல விதத்தில் முடியும்.

எதிர்ப்புகள் விலகும். வழக்குகளும் சாதகமாகும். என்றாலும் முன்கோபம், கண் எரிச்சல், காது வலி நீங்கும். 6ல் குரு நிற்பதால் வீண் பழிச்சொல்லுக்கு ஆளாவீர்கள். புதிய முயற்சிகளில் தடுமாற்றம் ஏற்படும். அரசுக்கு செலுத்தவேண்டிய வரியை உடனுக்குடன் செலுத்திவிடுவது நல்லது.

புதன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் செலவுக்கு பணம் வரும். கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். நட்பு வட்டம் விரியும். செவ்வாயும், கேதுவும் சேர்ந்து 9ல் நிற்பதால் சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். என்றாலும் முன்கோபம் வரும். பணவரவு அதிகரித்தாலும் செலவுகள் இருக்கும்.

சொன்ன தேதியில் பணத்தை தந்து முடித்து பழைய கடனில் ஒரு பகுதியை தீர்ப்பீர்கள்.

அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை தலைமை தரும். மாணவர்களே! நீங்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில், விரும்பிய பாடப் பிரிவில் உயர்கல்வி தொடரும் வாய்ப்பு கிட்டும்.

கன்னிப் பெண்களே! நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். வேற்றுமதம், மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. இரும்பு, ஸ்கிராப்ஸ், உணவு, கட்டிட உதிரி பாகங்களால் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் ஆர்வம் பிறக்கும்.

மூத்த அதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். ஆனால் அஷ்டமத்துச் சனி தொடர்வதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். உங்களைப் பற்றிய வதந்திகளும் வரத்தான் செய்யும்.

அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினரே! இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லை குறையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூன் 15, 16, 17, 18, 23, 24, 25, 26 மற்றும் ஜூலை 5, 6, 7, 8, 12, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூன் 27ம் தேதி நண்பகல் 12.08 மணி முதல் 28, 29ம் தேதி வரை.

மிதுனம்

கரைப்பார், கரைத்தால் கல்லும் கரையும் என்ற பழமொழியை அறிந்த நீங்கள், இங்கிதமான பேச்சால் மற்றவர்கள் மனதில் எளிதில் இடம் பிடிப்பவர்கள். ராசிநாதன் புதன் இந்த மாதம் முழுக்க வலுவான வீடுகளில் செல்வதால் உற்சாகம் பொங்கும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். உறவினர்கள் உதவுவார்கள். நல்ல மருத்துவர் அறிமுகமாவார். நோயின் தாக்கம் குறையும்.

ஆனால் உங்கள் ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகமாகும். தவிர்க்க முடியாத பயணங்களும் இருக்கும். தூக்கமும் கொஞ்சம் குறையும். மற்றவர்கள் ஏதேனும் ஆலோசனைக் கூறினாலோ அல்லது உங்களது தவறுகளை சுட்டிக் காட்டினாலோ அல்லது உங்களை விமர்சித்துப் பேசினாலோ அதை பொறுமையாக ஏற்றுக் கொள்வது நல்லது.

விவாதங்களையும் தவிர்க்கப் பாருங்கள். குரு 5ம் வீட்டில் வலுவாக இருப்பதால் பிள்ளை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். மகளுக்கு நல்லபடியாக திருமணம் முடியும்.

மகனுக்கிருந்த கூடாப்பழக்கம் விலகும். உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உயர் ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த உரசல்கள் விலகும். 7ம் வீட்டில் சனியும், ராசிக்கு 8ம் வீட்டில் நிற்கும் கேதுவுடன், செவ்வாயும் சேர்ந்திருப்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். சகோதரங்களுடன் மனத்தாங்கல் வரும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எனவே கொஞ்சம் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். தூக்கமின்மை, கனவுத் தொல்லை வரக்கூடும். குடும்ப அந்தரங்க விஷயங்களை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

அரசியல்வாதிகளே! எதிர்கட்சியினரை வரம்பு மீறி தாக்கிப் பேச வேண்டாம்.

மாணவர்களே! உயர்கல்வி விஷயத்தில் இருந்த குழப்பம் நீங்கும். போராடி விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களை ஏமாற்றி வந்த சிலரிடமிருந்து இந்த மாதத்தில் விடுபடுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி உண்டு. பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பழம், காய்கறி, கட்டிட உதிரி பாகங்கள், வாகனம் மூலமாக லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் விரும்பத்தக்கதாக இடமாற்றம் வரக்கூடும். சக ஊழியர்களின் விடுப்பால் கூடுதல் நேரம் வேலைப் பார்க்க வேண்டி வரும்.

ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள்.

கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். பணபலம் உயரும். விவசாயிகளே! வரப்புச் சண்டையைப் பெரிதாக்காதீர்கள். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ள வேண்டாம். தன் பலவீனங்களை சரி செய்துக் கொள்ள வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூன் 17, 18, 19, 20, 25, 26, 27, 28 மற்றும் ஜூலை 5, 6, 7, 8, 14, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூன் 30 மற்றும் ஜூலை 1, 2ம் தேதி காலை 10.05 மணி வரை.

கடகம்

தடைகளைக் கண்டு தளராமல், பீனிக்ஸ் பறவைபோல ஓயாமல் போராடி உயிர்த்தெழும் குணம் கொண்ட நீங்கள், கடின உழைப்பாளிகள். புதன் சாதகமான வீடுகளில் இந்த மாதம் முழுக்க செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள்.

வீடு கட்ட, வாங்க, வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். தந்தைவழியில் உதவிகள் உண்டு.

உங்களுடைய ராசிக்கு 12ம் வீட்டிலேயும் சூரியன் நுழைந்திருப்பதால் இந்த மாதம் முழுக்க செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். திடீர் பயணங்களும் இருக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளையும் நீங்கள்தான் எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அவ்வப்போது தர்ம சங்கடமான சூழ்நிலையிலும் சிக்கிக் கொள்வீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளெல்லாம் எடுக்காதீர்கள்.

உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை நீங்கள் உணர்ந்து செயல்படுவது நல்லது. குரு 4ல் நிற்பதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும்.

6ல் சனி வலுவாக இருப்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பால்ய நண்பர்கள் உங்களை தேடி வருவார்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்கள் உதவுவார்கள். உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரன் செல்வதால் தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். உயர்ரக ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். செவ்வாயும், கேதுவும் 7ம் வீட்டில் சேர்ந்திருப்பதால் சகோதர வகையில் மனக்கசப்புகள் தொடரும். அவர்களை அனுசரித்துப் போவது நல்லது. வாகனத்தை கவனமாக இயக்குங்கள்.

அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம். மாணவர்களே! கல்விப் பிரிவில் தேர்ந்தெடுப்பதில் குழப்பங்கள் வேண்டாம். பெற்றோர், நண்பர்களை கலந்தாலோசிப்பது நல்லது.

கன்னிப் பெண்களே! நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பங்குதாரர்கள், வேலையாட்களால் ஏமாற்றங்களும், அலைக்கழிப்புகளும் இருக்கும். ஊனமுற்றவர்களை வேலையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நீசப் பொருட்கள் மூலமாக லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். பல முக்கிய வேலைகளை மேலதிகாரி உங்களை நம்பி ஒப்படைப்பார். அவ்வப்போது இடமாற்றம் வருமோ என்ற ஒரு அச்சம் இருக்கும். சக ஊழியர்களுடன் ஈகோவாகப் பேச வேண்டாம். நேரடி மூத்த அதிகாரி தொந்தரவு தருவார்.

கலைத்துறையினரே! கிசுகிசுத் தொல்லைகள் வரும். உங்களின் படைப்புகளை ரகசியமாக வையுங்கள். எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். விவசாயிகளே! மரப்பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கரும்பு, வெண்டைக் காய், கீரை வகைகளால் லாபம் வரும். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூன் 20, 21, 22, 23, 28, 29, 30 மற்றும் ஜூலை 8, 9, 10, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூலை 2ம் தேதி காலை 10.06 மணி முதல் 3, 4ம் தேதி இரவு 8.15 மணி வரை.

சிம்மம்

எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் ஆழமாக யோசித்து முடிவெடுக்கும் நீங்கள், கடந்து வந்த பாதையை ஒரு போதும் மறவாதவர்கள். உங்களுடைய ராசிநாதன் சூரியன் லாப வீட்டில் நுழைந்திருப்பதால் இந்த மாதம் முழுக்க நீங்கள் பரபரப்பாக காணப்படுவீர்கள். புகழ், கௌரவம் ஒருபடி உயரும். தடைப்பட்ட காரியங்களை சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள். வேலை கிடைக்கும்.

சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கால் வலி, கழுத்து வலி, முட்டு வலி குறையும். முகப்பொலிவுக் கூடும். கோபம் குறையும். சங்கம், இயக்கம் இவற்றில் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகளும் அதிகமாகும். 3ல் குரு நிற்பதால் சில விஷயங்களை போராடி முடிக்க வேண்டியது வரும்.

சொந்தம்பந்தங்களின் வருகையால் கையிருப்பு கரையும். அரசு காரியங்களில் அலட்சியப் போக்கு வேண்டாம். புதன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் நட்பு வட்டம் விரியும். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். அயல் நாடு செல்ல விசா கிடைக்கும்.

5ல் சனி நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். பூர்வீக சொத்தை அதிகம் செலவு செய்து பராமரிக்க வேண்டி வரும். கேதுவும், செவ்வாயும் வலுவாக இருப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வேற்றுமதம், மொழியினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் அழகு, இளமைக்கூடும். புதிதாக சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

அரசியல்வாதிகளே! எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள். தலைமையுடன் நெருக்கமாவீர்கள்.

மாணவர்களே! உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். கன்னிப் பெண்களே! புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி லாபம் கிடைக்கும்.

புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கடன் வாங்கி முதலீடு செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் பழைய பங்குதாரர்கள் விலகுவார்கள். வசதி, வாய்ப்பு, நல்ல பின்னணி உள்ள பங்குதாரர்கள் வந்து சேருவார்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள்.

ஏற்றுமதி இறக்குமதி, கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிகாரிகள் உங்களின் ஆலோசனைகள், கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வார்கள். அதிக சம்பளத்துடன் பதவி உயர்வு, உங்களுக்கு தகுந்த இடமாற்றமெல்லாம் கிடைக்கும்.

கலைத்துறையினரே! பெரிய பெரிய வாய்ப்புகள் கூடி வரும். விருது, பரிசு, பாராட்டுகள் கிடைக்கும். விவசாயிகளே! எதிர்பார்த்த பட்டா வந்து சேரும். மகசூல் ரெட்டிப்பாகும். வீட்டில் நல்லது நடக்கும். எதிர்பாராத வெற்றிகளை சந்திக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூன் 15, 16, 22, 23, 24, 30, 31 மற்றும் ஜூலை 1, 2, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூலை 4ம் தேதி இரவு 8.16 மணி முதல் 5, 6ம் தேதி வரை.

கன்னி

எதிராளிகளையும் சிந்திக்க வைக்கும் நீங்கள், சுற்றுப்புறச் சூழலுக்கு கட்டுப்படாமல் தனக்கென தனிப்பாதையில் செல்பவர்கள். கடந்த ஒரு மாதகாலமாக உங்களுடைய ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்து மனக்கஷ்டங்களையும், பணத்தட்டுப்பாட்டையும் தந்து வந்த சூரியன் இப்போது 10ம் வீட்டில் நுழைந்திருப்பதால் இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும்.

அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். செல்வாக்குக் கூடும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். குரு 2ல் நிற்பதால் உங்களின் செல்வாக்கு

உயரும். உங்கள் பேச்சுக்கு தனிமரியாதை கிடைக்கும்.

பிள்ளைகளின் வருங்காலத்தை எண்ணி அவ்வப்போது கவலைப்பட்டீர்களே, இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்துவார்கள். 4ல் அமர்ந்திருக்கும் சனியால் தாயாரின் உடல் நலம் பாதிக்கும். பழைய கடனை நினைத்து அச்சப்படுவீர்கள்.

சகோதரங்களால் நிம்மதி இழப்பீர்கள். தாய்மாமன், அத்தை வழியில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். இந்த மாதம் முழுக்க புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள்.

குழம்பிக் கொண்டிருந்த நீங்கள், தெள்ளத் தெளிவாக முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும். நண்பர்கள், உறவினர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் இவற்றையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.

செவ்வாயும், கேதுவும் 5ல் நிற்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். என்றாலும் சில நேரங்களில் கோபப்படுவீர்கள். சிலரின் சுயரூபத்தை அறிந்துக் கொண்டு வருத்தப்படுவீர்கள்.

அரசியல்வாதிகளே! போராடி பதவியை தக்க வைத்துக் கொள்வீர்கள்.

மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். ஞாபக சக்தி கூடும்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். கடையை விரிவுப்படுத்தி அழகுப்படுத்துவீர்கள். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். உங்களுடைய புதுத் திட்டங்களை ஆதரிப்பார்கள்.

வேலையாட்கள் உங்கள் மனதைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுவார்கள். உத்யோகத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் வரும். இடமாற்றங்கள் வரும். சிறுசிறு அவமானங்கள் வரக்கூடும். வேலைச்சுமையும் அதிகரிக்கும். அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கலைத்துறையினரே! நல்ல வாய்ப்புகள் கூடி வரும். உங்களின் யதார்த்தமான படைப்புகள் பலராலும் பாராட்டிப் பேசப்படும். விவசாயிகளே! தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். போராட்டங்களை கடந்து சாதிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூன் 15, 16, 17, 23, 24, 25, 26, 28 மற்றும் ஜூலை 3, 4, 5, 6, 12, 13, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூலை 7, 8, 9ம் தேதி காலை 9.23 மணி வரை.

துலாம்

வஞ்சப் புகழ்ச்சியால் சுற்றியிருப்பவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் நீங்கள், எப்போதும் நீதி நேர்மைக்கு குரல் கொடுப்பவர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்களுடைய ராசிக்கு 8ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு அலைச்சலை தந்த சூரியன் இப்போது 9ல் நுழைந்திருப்பதால் ஓரளவு அலைச்சல் குறையும்.

ஆனால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மனத்தாங்கலும் வரும். அரசு விவகாரங்களிலும் அலட்சியம் வேண்டாம்.

சட்டத்திற்கு புறம்பான வகையில் உதவிகள் வந்தால் ஏற்றுக் கொள்ளாதீர்கள். 3ல் சனி வலுவாக அமர்ந்திருப்பதால் மனோ பலம் அதிகரிக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.

பழைய கடன் பிரச்னைகள் தீரும். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பணவரவு திருப்தி தரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வசதி, வாய்ப்புகள் கூடும்.

அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சச்சரவு விலகும். செவ்வாயும், கேதுவும் 4ல் சேர்ந்து நிற்பதால் பெற்றோருடன் கருத்து மோதல்கள் வரும். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும்படி செயல்படுங்கள். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். ஜென்ம குரு தொடர்வதால் உடல் நலக்குறைவு ஏற்படும்.

வெளிஉணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிகம் நீர் அருந்துங்கள். யாரையும் யாருக்காகவும் சிபாரிசு செய்ய வேண்டாம்.

அரசியல்வாதிகளே! பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

மாணவர்களே! படிப்பில் ஆர்வம் உண்டாகும். தொடக்கத்திலேயே நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். கன்னிப் பெண்களே! உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். காதலில் வெற்றி உண்டு. வியாபாரம் செழிக்கும். தள்ளிப்போன ஒப்பந்தம் மீண்டும் கையெழுத்தாகும்.

பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை விரிவுப்படுத்துவது, சீர்படுத்துவது போன்ற முயற்சிகளும் வெற்றியடையும். பழைய வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் தேடி வருவார்கள்.

உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். சம்பள பாக்கி தொகையும் கைக்கு வரும்.

கலைத்துறையினரே! பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.

விவசாயிகளே! மரப் பயிர், எண்ணெய் வித்துக்களால் லாபம் வரும். கடின உழைப்பால் இலக்கை எட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூன் 17, 18, 19, 20, 21, 27, 28, 29 மற்றும் ஜூலை 1, 5, 6, 7, 8, 14, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூலை 9ம் தேதி காலை 9.24 மணி முதல் 10, 11 ம் தேதி நண்பகல் 12.56 மணி வரை.

விருச்சிகம்

ஆர்ப்பாட்டம் இல்லாமல் எதையும் சாதிக்கும் நீங்கள், பெரியோர், சிறியோர் என்றில்லாமல் எல்லோரிடமும் பணிவாக நடந்துக் கொள்வீர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் பிள்ளைகளால் நிம்மதியுண்டு. நட்பு வட்டம் விரியும்.

உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளி வட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடிக் கொண்டே போகும். பழைய நண்பர்கள் உதவுவார்கள்.

கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருந்த சூரியன் இப்போது 8ல் நுழைந்திருப்பதால் முன்கோபம் நீங்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அரசாலும் அனுகூலம் உண்டு. ஆனால் தந்தையாருக்கு அலைச்சல் அதிகரிக்கும். 12ல் குரு நிற்பதால் பணப்பற்றாக்குறை, வீண் செலவு, டென்ஷன் வந்துபோகும். பிரபலங்களின் நட்பை இழக்க நேரிடும்.

வருங்காலத்தை நினைத்து கவலைப்படுவீர்கள். சனி 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். கண் எரிச்சல், கட்டை விரலில் அடிப்படுதல் வந்துப் போகும். சில நாட்களில் தூக்கம் குறையும்.

செவ்வாயும், கேதுவும் 3ம் வீட்டில் சேர்ந்து நிற்பதால் சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க உதவிகள் கிடைக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள்.

நட்பு வட்டம் விரியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். வீடு கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைக்கும் முயற்சி பலிதமாகும்.

அரசியல்வாதிகளே! கட்சி மேலிடத்து விஷயங்களை வெளியிட வேண்டாம்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புங்கள்.

மாணவர்களே! புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தாமதிக்காமல் செலுத்துவது நல்லது. கமிஷன், ஸ்டேஷ்னரி, கெமிக்கல் வகைகளால் ஆதாயம் பெருகும். புதிய வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும்.

வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். சில நேரங்களில் தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கிருந்த எதிர்ப்புகள் நீங்கும்.

இடமாற்றம் உண்டு. சூரியன் மறைந்திருப்பதால் அலுவலகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் இல்லையே என வருத்தப்படுவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும்.

விவசாயிகளே! பம்பு செட் பழுதாகும். பக்கத்து நிலத்துக்காரருடன் பகைமை வேண்டாம். சிக்கனமும், நாவடக்கமும் தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூன் 19, 20, 21, 22, 28, 29, 30 மற்றும் ஜூலை 1, 2, 3, 4, 7, 8, 9, 10, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூன் 15, 16ம் தேதி காலை 7.15 மணி வரை மற்றும் ஜூலை 11ம் தேதி நண்பகல் 12.57 மணி முதல் 12,13ம் தேதி பிற்பகல் 3.22 மணி வரை.

தனுசு

தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படும் நீங்கள், பிறர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துவதில் வல்லவர்கள். ராசிக்கு 11ம் வீட்டில் குரு சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்திருந்த காரியங்கள் கைகூடும். மன தைரியம் பிறக்கும். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். செலவினங்களும் அதிகமாகும். தூக்கம் குறையும். லேசாக கண் எரிச்சல், தொண்டை புகைச்சல் வரக்கூடும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். உணர்ச்சிவசப்பட்டு பேசுவதையும் தவிர்ப்பது நல்லது.

ஜன்மச் சனி நடைபெறுவதால் யாருக்கும் உறுதி மொழி தர வேண்டாம். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புது வேலை கிடைக்கும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

செவ்வாயும், கேதுவும் 2ல் நிற்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். என்றாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். கண் எரிச்சல் வந்து நீங்கும். ஒருவித படபடப்பும் இருக்கும். சகோதர, சகோதரிகள் உதவுவார்கள். கணவன்மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மனைவி உங்களின் புது முயற்சியை பாராட்டுவார்.

வீடு, மனை வாங்குவது, விற்பதும் லாபகரமாக அமையும். என்றாலும் தாய் பத்திரத்தை சரிபார்த்து வாங்கவும். சுக்கிரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் தன்னம்பிக்கை கூடும். சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள்.

வாகனத்தை சீர் செய்வீர்கள். புதிதாக வீடு வாங்க முயற்சி செய்வீர்கள். சகோதரிக்கு திருமணம் கூடி வரும். சகோதரருடன் இருந்து வந்த மனவருத்தமும் நீங்கும். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும்.

மாணவர்களே! மதிப்பெண் உயரும். நினைவாற்றல் கூடும். ஆசிரியரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலையாட்களையும் சேர்ப்பீர்கள்.

பங்குதாரர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். ரியல் எஸ்டேட், பெட்ரோகெமிக்கல், மர வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். சம்பள பாக்கி கைக்கு வரும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். சிலர் அலுவலகம் சம்பந்தமாக வெளிநாடு சென்று வருவீர்கள்.

கலைத்துறையினரே! பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் வரும். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள். விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டைகள் தீரும். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். வி.ஐ.பிகளால் பாராட்டப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூன் 15, 21, 22, 23, 24 மற்றும் ஜூலை 1, 2, 3, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூன் 16ம் தேதி காலை 7.16 மணி முதல் 17,18ம் தேதி காலை 9.40 மணி வரை மற்றும் ஜூலை 13ம் தேதி பிற்பகல் 3.23 மணி முதல் 14, 15ம் தேதி மாலை 5.52 மணிவரை.

மகரம்

கொடுத்துச் சிவந்த கைகளுடைய நீங்கள், எவரிடமும் உதவி கேட்டு கை நீட்ட மாட்டீகள். பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுபவர்கள் நீங்கள். ஒரு மாத காலமாக 5ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு பிள்ளைகளுக்கு பிரச்னைகளையும், சிக்கல்களையும் கொடுத்த சூரியன் இந்த மாதம் முழுக்க 6ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு.

அவர்களை எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில், விரும்பிய பாடப்பிரிவில் சேர்ப்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். சனி 12ல் நிற்பதால் தவிர்க்க முடியாத செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். வீடு, மனை வாங்கும் போது, விற்கும் போது அலட்சியம் வேண்டாம். தங்க ஆபரணங்களை கவனமாகப் பயன்படுத்தவும்.

22ம் தேதி வரை புதன் 6ல் மறைந்திருப்பதால் தூக்கமின்மை, கண் எரிச்சல் வரக்கூடும். உறவினர்கள், நண்பர்களின் சுரூபத்தை அறிவீர்கள்.

23ம் தேதி முதல் புதன் ராசியைப் பார்ப்பதால் திட்டமிட்டு எந்த வேலையையும் செய்வீர்கள். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தீர்களே, இனி நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டிற்கு குடிபுகுவீர்கள். மகான்கள், கல்வியாளர்களின் நட்பு கிட்டும். செவ்வாயும், கேதுவும் சேர்ந்து ராசிக்குள் நிற்பதால் வீண் சந்தேகத்தால் சிலரின் நட்பை இழக்க நேரிடும்.

அவசரப்பட்டு சில வார்த்தைகள் சொல்லி அதனால் மனக்கசப்புகள் உறவினர், நண்பர்கள் மத்தியில் ஏற்படக்கூடும். அதனால் அதிரடி பேச்சுகளை குறைப்பது நல்லது. ஏழரைச் சனி தொடங்கியிருப்பதால் யாராக இருந்தாலும் இடைவெளிவிட்டு பழகுவது நல்லது. திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.

அரசியல்வாதிகளே! எதிர்க்கட்சியிரை தாண்டி முன்னேறுவீர்கள். தொகுதியில் மதிக்கப்படுவீர்கள்.

மாணவர்களே! நல்லவர்களின் நட்பால் முன்னேறுவீர்கள். மந்தம், மறதி நீங்கும்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். கடைக்கு செல்லாமலேயே இருந்தீர்களே! அந்த நிலை மாறி ஆர்வமாக கடைக்கு செல்வீர்கள்.

வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அவ்வப்போது உங்களிடம் எதிர்மறையாக பேசி வந்த பங்குதாரர்கள் விலகுவார்கள். நேர்மறை எண்ணங்கள் மற்றும் உங்களை ஆதரிக்கும் பங்குதாரர் வந்து சேருவார். கடையை பிரபலமான இடத்திற்கு மாற்றுவீர்கள்.

புது முதலீடு செய்ய உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் இனி நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். என்றாலும் 10ல் குரு நிற்பதால் உத்யோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

மேலதிகாரியைப் பற்றி சக ஊழியர்களிடம் விமர்சித்துப் பேசாதீர்கள். அதிக சம்பளத்துடன் அண்டை மாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.

கலைத்துறையினரே! உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பரிசு, பாராட்டுகள் உண்டு.

விவசாயிகளே! வற்றிய கிணற்றில் நீர் ஊற செலவு செய்து கொஞ்சம் தூர் வார்வீர்கள். மகசூல் பெருகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். தொட்டதெல்லாம் துலங்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூன் 15, 16, 17, 23, 24, 25, 26 மற்றும் ஜூலை 3 ,4, 5, 6, 7, 8, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூன் 18ம் தேதி காலை 9.41 மணி முதல் 19, 20ம் தேதி பிற்பகல் 1.02 மணி வரை.

கும்பம்

பொதுவுடைமைச் சிந்தனைவாதிகளான நீங்கள் மற்றவர்களிடம் மனம் நோகாமல் பேசி பழகுவீர்கள். குரு ராசிக்கு 9ம் வீட்டில் சாதகமாக அமைந்திருப்பதால் திடீர் பணவரவு, செல்வாக்கு, கௌரவப்பதவிகள் தேடி வரும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.

கணவன்மனைவிக்குள் மனம் விட்டுப்பேசுவீர்கள். சனி லாப வீட்டில் நிற்பதால் அயல்நாடு, அண்டை மாநிலத்தவரால் ஆதாயம் அடைவீர்கள். சூரியன் இந்த மாதம் முழுக்க 5ம் வீட்டில் நிற்பதால் அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். கண் வலியும் வரும். குளிர்ச்சி தரக்கூடிய காய், கனிகளை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் உணர்வுகளை, ஆசைகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படப்பாருங்கள்.

உங்களுடைய எண்ணங்களை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். பாகப்பிரிவினை விஷயத்திலும் தடங்கல்கள் வந்து நீங்கும். 22ம் தேதி வரை புதன் சாதகமாக இருப்பதால் ஆன்மிகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிட்டும்.

ஆழ்ந்து சிந்தித்து எந்த ஒரு முடிவையும் எடுக்கப் பாருங்கள். நீண்ட நாளாக போக நினைத்தும் முடியாமல் போன குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வருவீர்கள். 23ம் தேதி முதல் புதன் 6ல் சென்று மறைவதனால் உறவினர்கள், நண்பர்களுடன் உரசல் போக்கு வந்து போகும்.

செவ்வாயும், கேதுவும் சேர்ந்து 12ல் நிற்பதால் உங்கள் பிள்ளைகள் கல்வி, வேலைக்காக அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். கர்ப்பிணிப் பெண்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும். வெளிப்படையான விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.

மாணவர்களே! விளையாட்டுக் கலைத்துறைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்.

கன்னிப் பெண்களே! காதல் வேறு, நட்பு வேறு என்பதை உணருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வசூலாகாமல் இருந்து வந்த பாக்கிகளும் வசூலாகும். பழைய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. கடையை விரிவுப்படுத்துவீர்கள். வேலையாட்களையும் மாற்றுவீர்கள்.

பங்குதாரர்களுடன் கருத்து மோதல்கள் வரும். சிலர் கூட்டுத் தொழிலிலிருந்து விடுப்பட்டு தனியாக சொந்தமாக தொழில் தொடங்கும் நிலை உருவாகும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். அதிகமாக உழைத்தும் அங்கீகாரம் இல்லையென்ற ஆதங்கமும் இருந்து கொண்டேயிருக்கும்.

சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும். பதவி உயர்வு சம்பந்தப்பட்ட தேர்வில் வெற்றி பெறுவீர்கள். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

விவசாயிகளே! மகசூல் பெருகும். பூச்சித் தொல்லை குறையும்.

கலைத்துறையினரே! உங்களுடைய உழைப்பிற்கு வேறு ஒருவர் உரிமைக் கொண்டாடக் கூடும். சிக்கனமும், நாவடக்கமும் தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூன் 16, 17, 18, 19, 23, 24, 25, 26, 27, 28 மற்றும் ஜூலை 5, 6, 7, 8, 14, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூன் 20ம் தேதி பிற்பகல் 1.03 மணி முதல் 21, 22ம் தேதி மாலை 6 மணி வரை.

மீனம்

அடுக்கடுக்காக தோல்வி வந்தாலும் அஞ்சாமல் அதிரடியாக செயல்பட்டு வெற்றி இலக்கை எட்டும் வேங்கைகளான நீங்கள், தளராத தன்னம்பிக்கையால் தடைகற்களை படிக்கட்டுக்களாக்கி பயணிப்பவர்கள். சூரியன் 4ம் வீட்டிற்குள் நுழைந்திருப்பதால் வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள்.

கூடுதல் அறை அமைப்பது, கழிவு நீர், குடி நீர் குழாயை மாற்றி அமைப்பது, மின்சார சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள்.

பழைய கடனை நினைத்து அவ்வப்போது பயம் வரும். 8ம் குரு நிற்பதால் யாருக்கு ஜாமீன், காரெண்டர் கையெழுத்து போடாதீர்கள். அரசாங்க காரியங்களில் அவசர முடிவுகள் வேண்டாம். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சனிபகவான் பத்தில் நிற்பதால் புதிதாக முதலீடு செய்து தொழில் தொடங்குவீர்கள்.

ஆனால் அதிக முதலீடு செய்ய வேண்டாம். புதன் சாதகமாக இருப்பதால் வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களின் உதவியுண்டு. ஆன்மிக பயணங்கள் சென்று வருவீர்கள். குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க முற்படுவீர்கள். 5ம் தேதி முதல் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6ல் மறைவதால் மனைவியின் உடல் நிலை பாதிக்கும்.

மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கழுத்து வலி, முதுகு வலி வந்துப் போகும். சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படும். வீடு கட்டுவதற்கு அனுமதி தாமதமாக கிடைக்கும்.

செவ்வாயும், கேதுவும் சேர்ந்து லாப வீட்டில் நிற்பதால் சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தாயாரின் ஆசீர்வாதமும் கிடைக்கும்.

எதிர்பார்த்த விலைக்கே பழைய மனையை விற்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள்.

மாணவர்களே! விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! நட்பு வட்டத்தில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள்.

தள்ளுபடி விற்பனை மூலமாக புதிய வாடிக்கையாளர்களை உங்கள் பக்கம் இழுப்பீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த சலிப்பு, வெறுப்பு நீங்கும். பங்குதாரர்களுடன் இருந்த அதிருப்தி விலகும். ஸ்டேஷனரி, துணி, மின்சார சாதனங்களால் லாபம் அதிகரிக்கும். வியாபாரம் சம்பந்தப்பட்ட பழைய பிரச்னைகள், வழக்குகள் சாதகமாகும். உத்யோகத்தில் தொந்தரவு கொடுத்த அதிகாரி மாறுவார். உங்களைப் புரிந்துக் கொள்ளக் கூடியவர் வருவார்.

சக ஊழியர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். புது வேலை கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். உத்யோகத்தின் பொருட்டு சிலர் குடும்பத்தை பிரிய வேண்டிய சூழல் வரும்.

கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் புகழடைவீர்கள். புதிய இளைய கலைஞர்கள் மூலமாக வெற்றியடைவீர்கள்.

விவசாயிகளே! மூலிகைப் பயிர்களால் ஆதாயமடைவீர்கள். பக்கத்து நிலத்துக்காரருடன் இருந்த பகைமை நீங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூன் 15, 16, 18, 19, 20, 21, 28, 29, 30 மற்றும் ஜூலை 3, 7, 8, 10, 12, 13, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூன் 22ம் தேதி மாலை 6 மணி முதல் 23, 24ம் தேதி வரை.

– Dina Karan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *