உடற்பயிற்சி செய்பவர்கள் அறியாமல் செய்யும் தவறுகள் ,Exercise-Missing-Mistakes-tamil-tips

உடற்பயிற்சி

புதிதாக உடற்பயிற்சி செய்கிறவர்கள் மட்டுமின்றி, வழக்கமாக உடற்பயிற்சி செய்கிறவர்களும் தாங்கள் அறியாமல் பல தவறுகளைச் செய்கிறார்கள். ஃபிட்னஸ் ஆர்வம் கொண்ட எல்லோரும் இதனை அறிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் தாங்கள் எதிர்பார்க்கும் பலனைப் பெற முடியும்.

எடுத்தவுடனே உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கக்கூடாது. உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பிப்பதற்கு முன், ‘வார்ம் அப்’ பயிற்சிகள் செய்வது அவசியம். அப்போதுதான் பயிற்சிகளுக்குப்பின் தசைகளில் ஏற்படும் வலியின் தீவிரத்தைக் குறைக்க முடியும். வார்ம் அப் செய்யும்போது உடல் வெப்பம் மற்றும் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், தசைகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் கிடைக்கும்.

பெண்கள் ட்ரெட் மில், வாக்கிங், ரன்னிங் போன்றவையே தங்களுக்கு போதுமென்று நினைக்கிறார்கள். இதுமட்டும் போதாது. கைகள், தொடைகள், பின்புறம், மேல்முதுகு, கீழ் முதுகு, முகம், கழுத்துப் பகுதி, வயிறு, இடுப்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கவனம் செலுத்தி அதற்கான பயிற்சிகளை செய்தால் மட்டுமே ஒரு பர்ஃபெக்டான உடலமைப்பை பெற முடியும். அதற்கு சின்னச்சின்ன தசைகளுக்கும் முக்கியத்துவம் தரும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

ஒரே மாதிரியான பயிற்சிகளை தொடர்ந்து செய்தால், கை முட்டி, கணுக்கால் எலும்புகளில் காயம் உண்டாகும். அப்பகுதிகளில் தொடர்ந்து அழுத்தம் ஏற்படுவதால் வீக்கமடைந்து, சிவந்து போய் தொடும்போதே கடுமையாக வலிக்கும். எனவே, ஒரே மாதிரியான பயிற்சிகளையே எப்போதும் செய்து கொண்டிராமல், எல்லாவகையான பயிற்சிகளும் ஒருங்கிணைந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். ஸ்ட்ரென்தனி்ங், வெயிட் லிஃப்டிங் போலவே ஐசொலேஷன் பயிற்சிகளும் தசைகளுக்கு வலு சேர்ப்பதில் முக்கியமானவை.

சரியான உபகரணங்கள் இல்லாமல், முறையான பயிற்சியின்றி செய்யும் பயிற்சிகள் தசைகள் வலுவிழப்பு, தசை உறுதித்தன்மையில் சமநிலையின்மை போன்ற விளைவுகளை உண்டாக்கும். அதிவேகமாக, சரியான பொசிஷனில் செய்யாத, அதே நேரத்தில் மிக அதிகமாக செய்யும் பயிற்சிகளும் தசைகளில் காயங்களை ஏற்படுத்தக்கூடும்.

அளவுக்கதிகமான எடைதூக்கி பயிற்சி செய்வதும் தவறு. பயிற்சியாளரின் அறிவுரையின்றி தாங்களாகவே கண்ணில் தெரியும் உபகரணங்களை தூக்கி பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இதனால் திசுக்கள் சேதமடைந்து விரைவில் உடற்பயிற்சி செய்வதையே இடையில் நிறுத்தி விடுவார்கள். பளு தூக்கி செய்யும் போது மூச்சு நுட்பங்களை பயிற்சியாளர் சொல்லித் தருவார். இல்லையென்றால், ஹெர்னியா என்கிற ஆண்களுக்கு குடல் இறங்குவது, பெண்களுக்கு கர்ப்பப்பை இறங்குவது போன்று உள்ளுறுப்புகள் சேதமடைய வாய்ப்புண்டு.  பளு தூக்குவதைப் பொருத்தமட்டில் ஒருவருக்கு, இவ்வளவு எடை, இத்தனை முறை செய்யலாம் என குறிப்பிட்ட விதிகள் இருக்கிறது. அவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *