பிக் பாஸ் – 2; ஃபன்னும் இருக்கு… பாட்டும் இருக்கு..! – போட்டியாளர்களின் முழு விவரம்!

சினிமா

பிக்பாஸ் முதல் சீசனின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இரண்டாவது சீசன் இன்று ஆரம்பிக்கப்பட்டது. முதல் நாளான இன்று போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தார் கமல்ஹாசன். பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் முழு விவரம் இதோ…

யாஷிகா ஆனந்த்:

யாஷிகா ஆனந்த்

முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் , யாஷிகா ஆனந்த். இவர் ’துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடித்த ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் படத்திற்கு பிறகு நிறைய படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக சென்றிருக்கிறார். இவர்தான் பிக்பாஸ் இரண்டாவது சீசன் போட்டியாளர்களில் வயது குறைந்தவர் என்று கமல் இவரை அறிமுகப்படுத்தினார்.

பொன்னம்பலம்:

பொன்னம்பலம்

முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த, யாஷிகாவைத் தொடர்ந்து வில்லன் நடிகர் பொன்னம்பலம் படுபயங்கரமாக என்ட்ரி கொடுத்தார். இரண்டாவது போட்டியாளராக இவரை அறிமுகம் செய்து வைத்தார், கமல். கமல்ஹாசனுடன் நடித்த படங்களின் அனுபவங்களைப் பற்றி மேடையில் நெகிழ்ந்த பொன்னம்பலம், மிகுந்த எதிர்பார்ப்புடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

மஹத்:

மஹத்

யாஷிகா ஆனந்த், பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் இவர்களைத் தொடர்ந்து மூன்றாவது ஆளாக நடிகர் மஹத் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். மங்காத்தா படத்தில் அஜித்துடன், ஜில்லா படத்தில் விஜய்யுடன், அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் சிம்புவுடன் நடித்து பிரபலமானவர் நடிகர் மஹத். இவர் மூன்றாவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். சிம்புவின் நண்பரான மஹத்தை, வாழ்த்தி பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் கமல்.

டேனியல் அன்னி போப்:

டேனியல் அன்னி போப்

இவர்களைத் தொடர்ந்து ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படப் புகழ் டேனியல் அன்னி போப் நான்காவது போட்டியாளராக அறிமுகமானார். ‘ஃப்ரெண்டு… லவ் மேட்டரு… ஃபீல் ஆகிட்டாப்ல… ஹாஃப் சாப்ட்டா கூல் ஆகிடுவாப்ல’ என்ற ஒரே வசனத்தில் பிரபலமானவர் டேனியல் அன்னி போப். ‘பொல்லாதவன்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்த இவர், சின்னச் சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். பின் ரங்கூன், மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்து காமெடி நடிகராக முத்திரை பதிக்கத் தொடங்கினார். தற்போது சில படங்கள் வெளியாக வெயிட்டிங் லிஸ்ட்டிலும் இருந்தாலும், டேனியல் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.

ஆர்.ஜே.வைஷ்ணவி:

ஆர்.ஜே.வைஷ்ணவி

யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத், டேனியல் ஆனி பாப்பைத் தொடர்ந்து, ரேடியோ ஜாக்கி வைஷ்ணவி  பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். குறும்படங்கள், ரேடியோ ஜாக்கி, எழுத்து பல தளங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் வைஷ்ணவி, சாவி இதழின் ஆசிரியரான சா.விஸ்வநாதன் அவர்களின் பேத்தியுமாவார். இவர் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் ஐந்தாவது போட்டியாளராக நுழைந்தார். கமல் இவரை அறிமுகப்படுத்தும் போது, ‘ 29 வயதில் 59 வயது மாதிரி பேசுகிறார்’ என்றார்.

ஜனனி ஐயர்:

ஜனனி ஐயர்

ஆரம்ப காலத்தில் விளம்பரங்களில் நடித்த ஜனனி ஐயர் ‘திரு திரு துறு துறு’ எனும் படத்தின் மூலம் கேமியோவாக நடித்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர். அதற்குப் பின்னர் பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் மெயின் ரோலில் நடித்து பலரது கவனத்தையும் பெற்றார், ஜனனி. மலையாளத்தில் சில படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகுந்த எதிர்பார்ப்புடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார், ஜனனி ஐயர்.

அனந்த் வைத்தியநாதன்:

அனந்த் வைத்தியநாதன்

யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத், டேனியல், ஆர்.ஜே.வைஷ்ணவி, ஜனனியைத் தொடர்ந்து வாய்ஸ் எக்ஸ்பர்ட் அனந்த் வைத்தியநாதன், பிக் பாஸ் வீட்டிற்குள் ஏழாவது போட்டியாளராக நுழைந்தார்.

விஜய் டிவியின் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான அனந்த் வைத்தியநாதன், பாலா இயக்கிய ’அவன் இவன்’ படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தற்போது ’சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி சென்றுக்கொண்டிருக்கும் நேரத்தில், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது சற்று ஆச்சரியமாக இருந்தாலும், வயது மூத்தவர் என்பதால் மற்ற போட்டியாளர்களை வழிநடத்துவார் என்றும் பிக் பாஸ் வீட்டிற்குள் கச்சேரி நடத்துவார் என்றும் எதிர்பார்க்கலாம்.

பல தயக்கங்களுக்குப் பிறகே இந்த நிகழ்ச்சிக்குள் வர வேண்டும் என நினைத்தேன் என்று கமலிடம் அனந்த் வைத்தியநாதன் கூறிய போது, இவருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பது தெரிந்து, லக்கி மேன் என்று வீட்டிற்குள் வழியனுப்பி வைத்தார் கமல்.

ரம்யா என்.எஸ்.கே:

ரம்யா என்.எஸ்.கே

வாய்ஸ் எக்ஸ்பெர்ட் அனந்த் வைத்தியநாதனைத் தொடர்ந்து பின்னணிப் பாடகி ரம்யா என்.எஸ்.கே, கமல்ஹாசன் பாடலைப் பாடிய பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி ரம்யா, கலைவாணர் திரு என்.எஸ்.கிருஷ்ணனின் மகன் வழியில் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது. இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், இமான், விஜய் ஆன்டனி என பலரது இசையிலும் இவர் பாடியுள்ளார்.

சென்றாயன்:

சென்றாயன்

’பொல்லாதவன்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான சென்றாயன், ’ஆடுகளம்’, ’மூடர்க்கூடம்’, ’ரெளத்திரம்’, ’மெட்ரோ’, ’பஞ்சு மிட்டாய்’ என பல படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து பிரபலமானவர் சென்ராயன். இவர் ஒன்பதாவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். ஏற்கெனவே காமெடி நடிகர் டேனியல் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பதால், அவருடன் சென்ராயனும் சேர்ந்து மக்களை ஃபன் கொடுப்பார்கள் என்பது கேரண்டி.

ரித்விகா:

ரித்விகா

நகைச்சுவை நடிகர்சென்றாயனைத் தொடர்ந்து ’மெட்ராஸ்’ படத்தில் நடித்த ரித்விகா, 10வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். பல குறும்படங்களில் நடித்திருக்கும் ரித்விகா, சினிமாவில் தனது முத்திரையை பதிக்க பல்வேறு முயற்சிகள் செய்து சினிமா வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார். பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார், ரித்விகா. அதற்குப் பின்னர், பா.இரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்தில் ‘மேரி’ கதாபாத்திரத்தில் நடித்த இவர் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். ஆரவாரமின்றி பிக்பாஸ் மேடையில் வந்த ரித்விகா, ‘எட்டு மாசமா ஒரு படமும் ரிலீஸாகலை’ என ஆரம்பித்தவுடன், ‘ஓ… உங்களுக்கும் அதே பிரச்னையா’ என்று நக்கலாக பதில் சொல்லி ரித்விகாவை பிக்பாஸ் வீட்டிற்குள் வழி அனுப்பி வைத்தார், கமல்.

மும்தாஜ்:

மும்தாஜ்

யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத், டேனியல், ஆர்.ஜே.வைஷ்ணவி, ஜனனி, அனந்த் வைத்தியநாதன், NSK ரம்யா, சென்றாயன், ரித்விகாவைத் தொடர்ந்து நடிகை மும்தாஜ் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்திருக்கிறார்.

’மோனிஷா என் மோனலிசா’ படத்தின் மூலம் டி.ராஜேந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட மும்தாஜ், ’குஷி’ படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்து தனக்கான புகழை தக்க வைத்துக் கொண்டிருந்தவர், சில வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காமல் ப்ரேக்கில் இருந்தார்.

தற்போது, ’எனக்குள்ள தூங்கிட்டு இருக்குற மிருகத்தை எழுப்பிடாதீங்க’ என்கிற டிஸ்க்ளைமரோடு பிக் பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி கொடுத்திருக்கிறார் மும்தாஜ். பல நாள்களாக வெள்ளித்திரையில் மும்தாஜை மிஸ் செய்தவர்கள், அவரை இனி சின்னத்திரையில் காணலாம்.

தாடி பாலாஜி:

தாடி பாலாஜி

தாடி பாலாஜி 12வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.  தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகனாக நடித்தவர், தாடி பாலாஜி. கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி நித்யாவிடமிருந்து ஒரு வருடமாக பிரிந்து வாழ்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்தி தனது மனைவி நித்யாவுடனும், குழந்தையுடனும் சேர்ந்து வாழ வேண்டும் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக தெரிவித்திருக்கிறார்.

தொகுப்பாளினி மமதி:

தொகுப்பாளனி மமதி

யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத், டேனியல், ஆர்.ஜே.வைஷ்ணவி, ஜனனி, அனந்த் வைத்தியநாதன், NSK ரம்யா, சென்ராயன், ரித்விகா,மும்தாஜ், தாடி பாலாஜியைத் தொடர்ந்து 13வது போட்டியாளராக தொகுப்பாளினி மமதி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். ‘செல்லமே செல்லம்’, ’ஹலோ தமிழா’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர் மமதி. நீண்ட நாள்களாக சின்னத்திரையை விட்டு விலகி இருந்தவர், சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் நடித்தார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்திருக்கிறார்.

நித்யா:

நித்யா

அனைவரும் எதிர்பார்த்தது போலவே அடுத்த போட்டியாளராக தாடி பாலாஜியின் மனைவி நித்யா பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்தார்.

ஒரு வருடத்திற்கு முன்பு இவருக்கும் பாலாஜிக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. அதனால் இருவரும் ஒரு வருட காலமாக பிரிந்து வாழ்கிறார்கள். கமல் நடத்தி வரும் மய்யம் கட்சியில் உறுப்பினராகவும் இருக்கிறார் நித்யா. அது மட்டுமின்றி நித்யா பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘எப்படியாவது என் மனைவியோட சேருவேன்’ என நம்பிக்கையோடு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தாடி பாலாஜியைத் தொடர்ந்து இவரும் தனது குழந்தையை கொஞ்சிவிட்டு பிக் பாஸ் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

டேனியல், சென்ராயன், பொன்னம்பலம், தாடி பாலாஜி என இவர்கள் ஜாலியாக பேசிக்கொண்டிருக்க, ’ஹாய் பாலாஜி, எப்படி இருக்கீங்க’ என கேஷூவலாக அவர்களிடையே தன்னை அறிமுகப்படுத்திகொண்டார், தாடி பாலாஜியின் மனைவி நித்யா.

ஷாரிக் ஹாசன்:

ஷாரிக் ஹாசன்

யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத், டேனியல், ஆர்.ஜே.வைஷ்ணவி, ஜனனி, அனந்த் வைத்தியநாதன், NSK ரம்யா, சென்ராயன், ரித்விகா,மும்தாஜ், தாடி பாலாஜி, மமதி, நித்யாவைத் தொடர்ந்து 15வது போட்டியாளராக நடிகர்கள் ரியாஸ் மற்றும் உமா ரியாஸின் மகனான ஷாரிக் ஹாசன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த பென்சில் படத்தில் வில்லனான நடித்த ரியாஸ் மற்றும் உமா ரியாஸ் தம்பதிகளின் மகனான ஷாரிக், தற்போது பிக் பாஸ் போட்டியாளராக நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். நடிகர் மட்டுமல்லாது விளையாட்டு வீரரான ஷாரிக்கை, பாட்டி கமலா காமேஷ், அப்பா ரியாஸ், அம்மா உமா, தம்பி சமத் என குடும்பமாக வந்து அவரை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர்.

ஐஷ்வர்யா தத்தா:

ஐஷ்வர்யா தத்தா

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார், ஐஷ்வர்யா தத்தா . அதற்குப் பின் ‘பாயும் புலி’ படத்தில் காஜல் அகர்வாலின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ‘கதாநாயகி ஆகிவிட வேண்டும்’ என்ற கனவோடுதான் இவரும் சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்புகளோடு சரி அதன் பின்னர், பெரிதாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த இவர், ’எந்திரன்’ பட பாடலுக்கு அசத்தலான டான்ஸோடு பிக் பாஸ் மேடையில் என்ட்ரி கொடுத்தார். எல்லோரைப்போலவும் இவரும் கமலிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு பேசத் தொடங்கினார். தமிழர்களின் பெருமையை அனைவரிடமும் பகிர்ந்துகொண்டு எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார், ஐஷ்வர்யா தத்தா.

ஓவியா:

17வது போட்டியாளர் என்று சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் ஓவியா. போட்டியாளரைப் போல் உள்ளே சென்று மற்ற போட்டியாளர்களுக்கு அட்வைஸ் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். ’நீங்கள் போட்டியாளர் இல்லை ஆனால் போட்டியாளராகவே வீட்டிற்குள் சில காலம் இருங்கள்’ என்று கமல், ஓவியாவை வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போகும் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் வீட்டிற்குள் ஒன்று கூடிவிட்டார்கள். இதில் யார் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று பொருத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *