வீடு தேடி வரும் உணவு… சர்ச்சைகளும், சலுகைகளும்..

ஆரோக்கிய சமையல்

இளைய தலைமுறையினருக்கு, நவீன தொழில்நுட்பங்களின் மீதும், புதுப்புது அப்ளிகேஷன்கள் மீதும் தீராத ஆர்வம் இருக்கிறது. இதன் விளைவாக சந்தைக்கு வரும் புதுப்புது கேட்ஜெட்களையும், அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தி பார்க்க ஆசைப்படுகிறார்கள். குறிப்பாக அப்ளிகேஷன் உலகில் தங்களை சிறந்தவர்களாக முன்நிறுத்திக் கொள்ள முயல்கிறார்கள்.

இன்றைய டிரெண்டிங்கிற்கு ஏற்ப, இன்றைய வைரல் விஷயங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதுடன், அப்ளிகேஷன் உலகிலும் அப்-டேட்டாக இருக்கிறார்கள். ‘‘இது மிகவும் பழைய அப்ளிகேஷன், இன்றைக்கு இதுதான் புது டிரெண்டிங்’’ என்று நண்பர்களோடு சிலாகிப்பதோடு, ‘‘அந்த ‘ஆப்’பில் அவ்வளவு சலுகை கிடைக்கிறது, இந்த ‘ஆப்’பில் இவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இவ்வளவு பணத்தை மிச்சப்படுத்தினேன்’’ என்று தற்பெருமை பேசுவதற்கும் ஆசைப்படுகிறார்கள்.

இவர்களது மனநிலைக்கேற்ப, அப்ளிகேஷன் நிறுவனங்களும் சலுகை மழை பொழிந்து வருகிறார்கள். ‘கூகுள் பே’, ‘பேடிஎம்’ போன்ற பணபரிமாற்ற அப்ளிகேஷன்கள் ‘ஸ்கிராட்ச் கார்ட்’ வகையிலான சலுகைகளையும், அமெசான், பிலிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனையகங்கள் ‘கேஷ் பேக்’ சலுகைகளையும் வழங்குகின்றன.

பிரபல அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, பிரபலமில்லாத ‘ஆப்’களிலும் சலுகைகள் மலிந்துகிடக்கிறது. இப்படி சலுகைகளை அள்ளி வழங்கும் எல்லா ‘ஆப்’களையும் பற்றி நாம் இங்கு ஆய்வு செய்யப்போவதில்லை. சுவையான உணவுகளையும், சூடான சலுகைகளையும் இளைஞர்களுக்கு வழங்கி வரும் சில உணவு ‘ஆப்’களின் நன்மை, தீமைகள் பற்றி மட்டுமே அலசிப்பார்க்க இருக்கிறோம்.

வங்கி, அலுவலகம், டிக்கெட் முன்பதிவு மையம், செல்போன் ரீ-சார்ஜ் கடை, மின்வாரிய அலுவலகம், இறைச்சி-மீன் மார்க்கெட்… போன்ற எல்லா தேவைகளும், நம்முடைய ஸ்மார்ட் போனிற்குள் அப்ளிகேஷன்களாக வந்துவிட்டன. அந்தவரிசையில் தற்போது ஓட்டல்களும், உணவு ‘ஆப்’ வடிவில் நம் ஸ்மார்ட்போனிற்குள் வந்துவிட்டன.

ஊபர் ஈட்ஸ், ஸ்விகி, சோமாட்டோ, பாசோஸ்… என பல பெயர்களில் வந்திருக்கும் ‘ஆப்’ ஓட்டல்களில் உங்களுக்கு வேண்டிய உணவுகளை ஆர்டர் செய்தால், அவை சில நிமிடங்களிலேயே உங்கள் வீட்டிற்கு வந்துவிடும். அது பிரியாணியாக இருந்தாலும் சரி, பீட்சா-பர்கராக இருந்தாலும் சரி, ஆர்டர் செய்த 15 நிமிடங்களுக்குள் உணவு உங்களை தேடி பறந்துவந்துவிடும்.

இத்தகைய உணவு ‘ஆப்’களை நிர்வகிக்கும் நிறுவனங்கள், உணவுப் பொருட்களைப் பெற்று வழங்குவதற்காகவே பிரபலமான உணவகங்கள் மற்றும் ஓட்டல்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. அதனால் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் ஓட்டல்களில் குறிப்பிட்ட உணவை, ‘ஆப்’களின் மூலம் ஆர்டர் செய்தால், அதை அந்த ‘ஆப்’ நிறுவனத்தின் விநியோக பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள், சுடச்சுட டெலிவரி செய்துவிடுவார்கள்.

“நாம் இருக்கும் இடத்திலேயே நாம் விரும்பிய உணவு பொருள் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்ற அடிப்படையில்தான் இந்த உணவு ‘ஆப்’கள் இயங்குகின்றன. எனக்கு அந்த ஓட்டலில் இருந்து ‘பிரியாணி’, இந்த கடையில் இருந்து ‘பிஷ் பிங்கர்’, அந்த கடையில் இருந்து ‘ஐஸ் கிரீம்’, இந்த கடையில் இருந்து ‘பீட்சா’ என எதை ஆர்டர் செய்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் கிடைப்பதால், பல லட்சங்களில் தொடங்கி சில ஆயிரங்களில் வருமானம் ஈட்டும் இளையோர் வரை இத்தகைய ‘ஆப்’களைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் பரவலாகி வருகிறது.

இரவுப் பணியில் இருக்கின்ற பலரும் உணவு ‘ஆப்’ நிறுவனங்களின் சேவையை ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கின்றனர். நள்ளிரவு நேரத்தில் அருகிலுள்ள எந்தக் கடையாவது திறந்திருக்குமா, நமக்கு பிடித்தது கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருந்த பலரும் இத்தகைய ‘ஆப்’களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதிகாலை 2 மணி வரை இந்த சேவை கிடைப்பது அவர்களுக்கு ஒருவிதத்தில் ஆறுதல்.

உணவு சேவை ‘ஆப்’கள் மூலம் சில அடையாளம் தெரியாத கடைகளின் சுவையான உணவுகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சிறிய அளவில் இருக்கின்ற கடைகளும் உணவு சேவை ‘ஆப்’கள் மூலம் இட்லியும், பழச்சாறும், ஐஸ்கிரீமும் விற்பனை செய்யும் நிலை உருவாகி வருகிறது. இத்தகைய ‘ஆப்’கள் பொருளாதார சுழற்சிக்கு உதவுகின்றன எனினும், ஆடம்பரத்துக்கும், வீண் செலவுக்குமே வழிவகுக்கின்றன என்பது உண்மை.

அவசரத் தேவைக்காக உணவு ‘ஆப்’களை பயன்படுத்துவது ஒரு புறம் இருக்க, ஆடம்பரத்துக்காகவும் பகட்டுக்காகவும் இவற்றைப் பயன்படுத்துவது பலரிடம் அதிகரித்து வருகிறது. அதாவது, பணத்தைக் காரணமின்றி வீண் விரயம் செய்யும் ஒருவித மனநிலை நமது இளையோர் மத்தியில் வளர்ந்து வருகிறது என்று சொல்லலாம். பணம் இருந்தால் எதையும் நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்க முடியும் என்ற தவறான எண்ணமும் இத்தகைய ‘ஆப்’களின் பயன்பாட்டால் வளர்ச்சி அடைகிறது.

நமது பணத்தை யாருக்காக, எப்படி, பயனுள்ள விதத்தில் செலவிடுவது என்பதை இக்கால இளையோர் உணர்ந்து கொள்வது அவசியம். நமது பெற்றோரும் உடன்பிறந்தோரும் உறவினர்களும் வறுமையில் வாடும் வேளையில், நாம் சம்பாதித்த பணம் என்பதற்காக வீண் செலவு செய்வது முட்டாள்தனமானது. நமது குடும்பத்தில் இருப்போர் போதிய வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் வேளையில், ஆடம்பரத்துக்காக ‘மொபைல் ஆப்’களைப் பயன்படுத்தி பணத்தை வீணாக்குவது அறிவார்ந்த செயலாக இருக்காது.

இளையோர் தங்களைத் தனிமனிதராக மட்டும் பார்க்காமல், ஒரு குடும்பத்தின், சமூகத்தின் அங்கத்தினராகப் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு, உணவு சேவை ‘ஆப்’ நிறுவனங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது பலருக்கும் நினைவிருக்கலாம். ‘ஆப்’கள் மூலம் ஆர்டர் செய்து பெறுகின்ற உணவுப் பொருட்கள் பல நேரங்களில் தரமற்றவையாக இருக்கின்றன என்பது அவற்றில் முக்கியமானக் குற்றச்சாட்டு. இதன் விளைவாக, மத்திய அரசு இத்தகைய நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளையும், ஒழுங்குகளையும் கட்டாயமாக்கியது. அரசிடம் பதிவு செய்யாத கடைகளின் உணவுப் பொருட்களை ‘ஆப்’ நிறுவனங்கள் விநியோகம் செய்யக்கூடாது என்பது கட்டுப்பாடுகளில் முக்கியமானது.

அரசின் கட்டுப்பாடுகள், எந்த அளவுக்கு தரமான உணவை நாம் பெறுவதற்கு உறுதி அளிக்கின்றன என்பது கேள்விக்குறியே. உணவுப் பொருட்கள் தரமற்றதாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று, ‘ஆப்’ நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துள்ள உணவகங்கள் அல்லது கடைகள், வெளியே அனுப்பப்படும் உணவுப்பொருட்களை அவசர கதியில் தயாரித்து அனுப்புகின்றன. நேரில் வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு தயாரிக்கும் முறையில் ‘ஆப்’ வாடிக்கையாளர்களுக்கான உணவுகளை உணவகங்கள் தயாரிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

இரண்டாவதாக, ‘ஆப்’ நிறுவனங்கள் வழியாக ஒவ்வொரு நாளும் விற்பனையாகும் எண்ணிக்கையின் அடிப்படையில் முன்கூட்டியே உணவுப் பொட்டலங்கள் தயாராகிவிடுகின்றன. விநியோகத்தில் ஏற்படும் கால தாமதம், அந்த உணவுப் பொருட்களின் தரத்தைக் குறைத்து விடுகிறது. சில நேரங்களில், உணவகங்கள் முன்கூட்டியே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொட்டலங்களை ‘ஆப்’ நிறுவனங்களின் குடோன்களுக்கு அனுப்பி விடுகின்றன. ஆர்டருக்கு ஏற்ப அந்நிறுவனங்களில் இருந்தே அவை விநியோகிக்கப்படுவதால் தரத்தில் குறைபாடு காணப்படுகிறது என்பதும் குற்றச்சாட்டாக உள்ளது.

மூன்றாவதாக, குறிப்பிட்ட உணவகங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் சில ‘ஆப்’ நிறுவனங்கள், உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் உரிமையையும் பெற்றுக் கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. நாம் ஆர்டர் செய்யும் கடைகளின் பெயரில் உணவுப்பொருட்கள் பார்சல் செய்யப்பட்டிருந்தாலும், உண்மையில் அவை அந்த உணவகங்களில் தயார் செய்யப்படாததால் சுவையிலும் தரத்திலும் மாறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய உரிமை பெற்ற ‘ஆப்’ நிறுவனங்கள், சுகாதாரமற்ற குடோன்களில் உணவு தயாரிப்பதாகவும் சில சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகளை உணவு ‘ஆப்’ நிறுவனங்கள் மறுக்கின்றன. வாடிக்கையாளர்களின் ஆர்டர் பெறப்பட்ட பிறகே தங்கள் பணியாளர்கள் குறிப்பிட்ட கடைகளில் உணவுப்பொருட்களை வாங்கி விநியோகிப்பதாகவும், முன்கூட்டியே வாங்கி சேமித்து வைக்கின்ற வழக்கம் இல்லை என்றும், சொந்தமாக தயாரித்து விநியோகிப்பதை விடவும் கடைகளில் வாங்கி விநியோகம் செய்வதே தங்களுக்கு எளிதானது என்றும் ‘ஆப்’ நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிக வருவாய் ஈட்டும் இளையோரின் செலவையும் ஆடம்பரத்தையும் ‘ஆப்’ உணவு சேவை நிறுவனங்கள் அதிகரித்தாலும், பல ஏழைகளின் வருமானத்துக்கும் வழியமைத்துக் கொடுக்கின்றன. ஒரு ஆர்டருக்கு, ரூபாய் 40 விநியோக கட்டணமாக கிடைப்பதால் சிலர் பகுதி நேர வேலையாகவும், பலர் முழு நேர வேலையாகவும் செய்து வருகிறார்கள். ஆனால், தங்கள் பணியாளர்களின் நலனில் இந்த நிறுவனங்கள் சரியான அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு நியமிக்கப்படும் உணவு விநியோகப் பணியாளர்களுக்கு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட எந்த பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை என்பது வருத்தத்திற்குரியது.

சில ‘ஆப்’ நிறுவனங்கள், தங்கள் விநியோக பணியாளர்களுக்கு குறிப்பிட்ட மாதச் சம்பளம் நிர்ணயிக்காமல், கிடைக்கின்ற ஆர்டர்களுக்கு ஏற்ப கமிஷனை மட்டுமே சம்பளமாக வழங்கும் அவல நிலையும் உள்ளது. ‘உணவு ஆப்’கள் ஒருபுறம் முன்னேற்றமாகவும் ஆடம்பரமாகவும் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் பல்வேறு சோகங்களையும் குழப்பங்களையும் பாதுகாப்பில்லாத நிலையையும் கொண்டிருக்கின்றன.

ஆகவே, உணவு சேவை நிறுவனங்களின் ‘ஆப்’களைப் பயன்படுத்துவோர் அவற்றின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை அறிந்து பயன்படுத்துவது நல்லது. பணியாளர்களுக்கு சரியானப் பாதுகாப்பும், சம்பளமும் கொடுக்காத, தரமான உணவுப் பொருட்களை விநியோகம் செய்யாத நிறுவனங்களை தவிர்ப்பதும் நல்லது. அதேசமயம் அதிகம் பணம் செலவழிப்பது மட்டுமே உணவின் தரத்திற்கும் சுகாதாரத்திற்கும் உத்தரவாதமாக அமையாது. ஆடம்பரத்துக்காக அன்றி, அவசரத்துக்காக மட்டும் சரியான உணவு ‘ஆப்’களைத் தேர்வு செய்து பயன்படுத்துவோம்.

உணவிற்கு மட்டுமே பாதுகாப்பு

உணவு ‘ஆப்’ நிறுவனங்களின் விநியோக பணியாளர்கள், போக்குவரத்து மிகுந்த சாலைகளில் கருப்பு, சிவப்பு, ஆரஞ்சு வண்ண டீ-சர்ட்களில் ‘விர்’ என பறந்துக்கொண்டிருக்கிறார்கள். உணவை துரிதமாக கொண்டு சேர்த்தால்தான், இவர்களுக்கு நல்ல விமர்சனங்களும், அடுத்தடுத்த ஆர்டர்களும் கிடைக்குமாம். உணவை தாமதமாக கொண்டு சேர்த்தாலோ, உணவு பொட்டலங்கள் சேதமடைந்திருந்தாலோ, ஆர்டர் செய்தவர்கள் கடும் கோபக்காரர்களாக நடந்து கொள்வதுடன், விநியோக பணியாளர் மீது தவறான விமர்சனங்களையும் பதிவிடுகிறார்கள். இதனால் அவர்களது அடுத்தடுத்த ஆர்டர்கள் மறைமுகமாக பறிக்கப்படுவதுடன், அவர்களது வருமானமும் வெகுவாக குறைக்கப்படுகிறது.

விநியோக பணியாளர்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்பதைவிட, உணவை பாதுகாப்பாகவும், துரிதகதியிலும் விநியோகிக்கவேண்டும் என்பதே பெரும்பாலான உணவு ‘ஆப்’ நிறுவனங்களின் குறிக்கோளாகஇருக்கிறது.

போலி ஆர்டர்கள்

உணவு ‘ஆப்’ நிறுவனங்கள், விநியோக ஊழியர்களிடம் கண்டிப்போடு நடந்துக்கொள்வதற்கும் சில காரணங்கள் உள்ளன. உணவை ஓட்டல்களில் இருந்து வாங்கி, அதை உரியவரிடத்தில் சேர்ப்பதுதான், விநியோக ஊழியர்களின் வேலை. ஆனால் சில சமயங்களில் உணவை ஆர்டர் செய்தவர், அதை பாதியிலேயே ரத்து செய்வதுண்டு. அப்படி பாதியிலேயே ரத்து செய்யப்படும் உணவை ஓட்டல் நிறுவனங்களும் ஏற்றுக்கொள் வதில்லை.

சுருக்கமாக சொன்னால், அந்த உணவு விநியோக ஊழியர்களுக்கானதாகி விடுகிறது. மேலும் ரத்து செய்த ஆர்டருக்கான விநியோக கட்டணமும் வழங்கப்படும். இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சிலர், நண்பர்களின் உதவியோடு போலி ஆர்டர்களை அரங்கேற்றுகிறார்கள். பின்னர் அதை பாதியிலேயே ரத்தும் செய்து விடுகின்றனர். அவர்களது திட்டப்படி உணவிற்கு உணவும், பணத்திற்கும் பணமும் கிடைத்துவிடுகிறது. இப்படியே 6 போலி ஆர்டர்களை அரங்கேற்றினால், உணவு+கட்டணம் ஆகியவற்றுடன் போனஸ் தொகையும் கிடைத்து விடுமாம். இந்த பார்முலாவை பலரும் பயன்படுத்துவதால், ‘ஆப்’ நிறுவனங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *