விரைவில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சி

உடற்பயிற்சிகளையும் கால மாற்றத்துக்கேற்ப புதிய முறைகளில் மாற்றி நவீனமாக வடிவமைத்து வருகிறார்கள் நிபுணர்கள். ஸ்குவாட்ஸ், புஷ்-அப்ஸ் போன்ற வீட்டிலேயே செய்யும் பயிற்சிகளுக்கு மாற்றாக விலங்குகளின் அசைவுகளை மையமாக வைத்து வேடிக்கையாக செய்யும் Animal Workout என்ற பயிற்சி தற்போது பிரபலமாகி வருகிறது.

Animal workout பலராலும் விரும்பப்படுவதற்கான காரணம், சிரமம் இல்லாமல் விளையாட்டு போன்றே செய்துவிடலாம் என்பதும், பல்வேறு பலன்கள் உண்டு என்பதும்தான். இதனால் தானாகவே உடற்பயிற்சியின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.

அதுமட்டுமல்ல, விலங்குகளைப்போல தவழ்ந்து பயிற்சி செய்யும்போது கை, கால்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து செய்வோம். இதனால் தோள்பட்டை, முன்கை, பின்கால், தொடை, மணிக்கட்டு, பின்புறம் மற்றும் வயிறு தசைகளுக்கு அதிகப்படியான வலு கிடைக்கும். மேலும், எந்த உபகரணமும் இல்லாமல், உடல் முழுவதற்குமான உடல் எடை மற்றும் கார்டியோ உடற்பயிற்சிகள் செய்வதின் முழு பலன்களையும் இவற்றால் பெற முடியும்.

Donkey Kick Excercise

கைகளைத் தோளுக்கு நேராக தரையில் ஊன்றி, கால்களை பின்புறமாக நீட்டி, முழங்காலை மட்டும் சிறிது மடக்கிய நிலையில் இருக்க வேண்டும். கைகளை தரையில் நன்றாக ஊன்றிக் கொண்டு ஒரே ஜம்பில் தரையிலிருந்து மேலே எழ வேண்டும்.

முழங்கால் மார்புக்கு நேராகவும் பின்னங்காலை சற்றே உயர்த்திய நிலையில் 5 நொடிகள் அதே நிலையில் நிற்க வேண்டும்.  பின்னர் மெதுவாக பழைய நிலைக்கு வர வேண்டும். தரையிலிருந்து அதிக உயரம் தூக்க முடியாவிட்டாலும், வெறுமனே முழங்காலை மார்புக்கு நேராக மடக்க முயற்சிக்கலாம். கழுதை உதைப்பது போல வேடிக்கையான பயிற்சியாக இது இருக்கும்.

பலன்கள்

இரண்டு கால்களையும் மேலே தூக்கி செய்வதால், இடுப்பு மற்றும் பின்பக்க எலும்புகள், தசைகள் வலுவடைகின்றன. முக்கியமாக தோள்பட்டை எலும்புகளுக்கு உறுதி கிடைக்கிறது.

Bear walking

கைகள், கால்களை மடக்கி தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். இப்போது வலது முழங்காலை தரையில் ஊன்றியவாறு பின்னங்காலை சற்று பின்னோக்கி நீட்டியவாறு வைக்க வேண்டும். இடது முழங்காலை மடக்கி, பாதத்தை தரையில் ஊன்றியவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கடுத்து, குழந்தை தவழ்வதைப்போல் இப்போது வலது காலையும், இடதுகையையும் தரையில் ஊன்றி முன்புறமாக நகர்த்த வேண்டும். இதேபோல் முன்புறமாக 4 அடிகளும், பின்புறமாக 4 அடிகளும் மாற்றி மாற்றி செய்ய வேண்டும். இதற்கு கரடி நடை என்று பெயர்.

பலன்கள்

தசைக்கு வலு சேர்க்கிறது. இதயத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு வளர்சிதை மாற்றத்தையும் தூண்டி, உடலின் தாங்கும் திறனை அதிகரிக்கிறது. மொத்தத்தில், முழு உடலையும் பலப்படுத்தும் பயிற்சியாக பலனளிக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *