புற்றுநோயை குணப்படுத்த முடியுமா

மருத்துவம்

புற்றுநோய் என்றால் என்ன? அது மக்களை அச்சுறுத்தும் ஆபத்தான நோயா? என்ற கேள்வி பலரின் மனதிலும் உள்ளது. உறுப்பில் உள்ள செல், ஏதாவது தூண்டுதலினால் தன் அமைப்பிலிருந்து மாறுபட்டு, வேறுபட்டு புதிய செல்லாக உருவாகும், அது தான் புற்றுநோய் செல். அது சாதாரண செல்லை விட வேகமாகவும், விரைவாகவும் பெருகிக்கொண்டே இருக்கும். இவ்வாறு பெருகும் செல்கள் ஒன்றாக சேர்ந்து உருவாகும் கட்டி தான் புற்று நோய்க்கட்டி.

புற்றுநோய் உடலில் பல், முடி, நகம் தவிர உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது? என்பது குறித்து குழப்பம் நிலவி வருகிறது. புகைபிடித்தல், மதுப்பழக்கம், உடல் பருமன், சிவப்பு அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சி, உயர் உப்பு, கதிர்வீச்சு (புற ஊதா மற்றும் அயனியாக்கும் கதிர்வீச்சு) ஹார்மோன்கள், வைரஸ்கள், (கல்லீரலை பாதிக்கும் பி வைரஸ், சி வைரஸ் மற்றும் எப்ஸ்டீன்பார் வைரஸ்) பாக்டீரியா (ஹெலிகோபாக்டர் பைலோரி) மற்றும் ஒட்டுண்ணிகள், மற்றும் மரபியல் காரணங்களால் புற்றுநோய் ஏற்படலாம்.

உணவுப் பழக்கவழக்கம், ஆர்செனிக் மற்றும் சில ரசாயனப் பொருட்களினாலும், தொழில்மயமாக்கல், மாசுபடுதல், சுற்றுச்சூழல் காரணங்களாலும் புற்றுநோய் ஏற்படலாம். புற்றுநோய்களில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. முதியவர்களுக்குத்தான் புற்று நோய்கள் அதிகமாக ஏற்படும் என்றாலும், இளம் வயதினருக்கும், ஏன் சிறுவர்களுக்கு கூட சில வகை புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

புற்றுநோய் செல்கள் உருவான உறுப்பிலிருந்து உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் ரத்தத்தின் மூலமாகவும், நிணநீரின் மூலமாகவும் பரவும். அருகிலிருக்கும் திசுக்களுக்கும், உறுப்புகளுக்கும் பரவும். எந்த வகை புற்றுநோயாக இருந்தாலும் அது வளர்ந்து பரவியுள்ள தன்மையைப் பொறுத்து, அது ஆரம்பநிலையில் இருக்கிறதா? இல்லை முற்றிய நிலைக்குச் சென்றுவிட்டதா? என்று கண்டுபிடிக்கப்படும். இது சிகிச்சைக்கும், எதிர்கால கணிப்பிற்கும் பெரிதும் உதவும்.

உலக அளவில் ஒவ்வொரு வருடமும் 9.6 மில்லியன் மக்கள் புற்றுநோயால் இறக்கிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் உலகத்தில் 17 பேர் புற்றுநோயினால் பலியாகி கொண்டிருக்கிறார்கள். உலகில் நிகழும் 6 இறப்புகளில் ஒன்றுக்கு புற்றுநோய் தான் காரணமாக உள்ளது. பொதுவான புற்றுநோய்களில் மூன்றில் ஒரு பங்கு தடுக்கக்கூடியது. உலகளாவிய ரீதியில் மனிதர்களின் மரணத்திற்கு இரண்டாவது முக்கிய காரணம் புற்றுநோய் தான். 70 சதவீத புற்றுநோய் இறப்புகள் குறைந்த, நடுத்தர வருவாய் நாடுகளில் ஏற்படுகின்றன.

புற்றுநோய் தடுப்பு, ஆரம்ப கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கான ஆதார உத்திகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 3.7 மில்லியன் உயிர்கள் வரை சேமிக்க முடியும். இந்தியாவில் சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது தேசத்தில் கடந்த ஆண்டு மட்டும் 7,84,821 பேரை புற்றுநோய் காவு வாங்கியிருக்கிறது.

ஆண்களுக்கு, நுரையீரல், வாய், இரைப்பை, பெருங்குடல், புரோஸ்டேட் பகுதிகளிலும், பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கர்ப்பப்பை வாய்ப்பகுதி வாய், குடல் பகுதிகளிலும் புற்றுநோய் அதிக அளவு ஏற்படுகிறது. பசியின்மை, உடல் எடை குறைந்து கொண்டே வருதல், அசதி ஏற்படுதல், தீராத தலைவலி, சிகிச்சைக்கு கட்டுப்படாத தொடர் இருமல், பேச்சில், குரலில் வித்தியாசம் ஏற்படுதல், சிறுநீரில், மலத்தில் ரத்தம் கலந்து வருதல், தோலில் உள்ள மச்சம் திடீரென பெரிதாவது, அதிலிருந்து ரத்தம் கசிவது, காரணமில்லாமல் மூச்சு வாங்குவது, உணவை விழுங்க முடியாமல் சிரமப்படுதல், ஜீரண சக்தி குறைதல், சிறுநீர் கழிப்பதிலும், மலம் கழிப்பதிலும் காரணமில்லாமல் ஏற்படும் மாற்றங்கள், ஆறாத புண்-ரணங்கள், உடலில் ஏற்படும் வலியுடன் கூடிய கட்டிகள் போன்றவையே புற்றுநோய்க்கான பொதுவான காரணங்கள் ஆகும். புற்று நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி எனப்படும் மருத்துவ சிகிச்சைகள் இப்போது நடைமுறையில் உள்ளன. எதிர்ப்பாற்றலை அடிப்படையாக கொண்டு நவீன சிகிச்சைகளும் வந்து கொண்டிருக்கின்றன.

ஆரோக்கியமான உணவை குறிப்பாக, அதிக காய்கறிகள், பழங்கள், கீரை வகை உணவுகளை உட்கொள்ள வேண்டும். இவற்றில் இருக்கும் அதிக நார்ச்சத்து புற்றுநோயைத் தடுக்க உதவும். புகைபழக்கம், மது ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். குடிநீர், காற்று மாசுபாடு ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும். மனித பாபிலோமா வைரஸ் தடுப்பூசி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுக்க உதவுகிறது. மேலும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி கல்லீரல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டுக்கொள்ள வேண்டும்.

புற்றுநோய் குறித்து அதிகம் அச்சம் கொள்ள தேவையில்லை. ஏனெனில் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை செய்தால் இந்த நோயை எளிதில் குணப்படுத்தி விட முடியும். இதற்காகத்தான் ‘ஸ்கிரீனிங் திட்டங்கள்’ எனப்படும் மாஸ்டர் ஹெல்த் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

மக்கள் இதனை முறையாக பயன்படுத்தினால் புற்றுநோய் வராமலே தடுக்க முடியும். அப்படியே வந்தாலும் ஆரம்ப நிலையிலே கண்டறிந்து குணம் காண முடியும். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நோய்த்தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகளைப் பரப்புவதற்கும் ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ந் தேதி சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு அமைப்பின் மூலம் ‘உலக புற்றுநோய் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு இதன் கருப்பொருள், ‘என்னால் முடியும்’ என்பதாகும். மக்களிடம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படவேண்டும். வராமல் தடுத்தல், உரிய பரிசோதனைகளை செய்தல், ஆரம்பத்திலேயே நோய் கண்டறிதல், சிகிச்சை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நாமும், நாடும் புற்றுநோயின் பிடியில் இருந்து விடுபடலாம். ஆரோக்கியமாய் வாழலாம்.

டாக்டர் சு.முத்து செல்லக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *