பள்ளிகளில் தண்ணீர் மணி…. தமிழக அரசுக்கு சத்யராஜ் மகள் கோரிக்கை

உடல் ஆரோக்கியம்
நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவர் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும், நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமருக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் திருச்சி கருங்குளம் அரசு பள்ளியில் மாணவர்கள் நீர் அருந்த தண்ணீர் மணி அடிக்கப்படுகிறது. இதனை தமிழகம் முழுவதும் அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய திவ்யா, “குழந்தைகள் கோடைகாலத்தில் தண்ணீர் குடிக்கும் அளவிற்கு மழைக்காலத்தில் தண்ணீர் குடிப்பதில்லை. தண்ணீர் குடிக்காததால் பல உடல் உபாதைகள் வரும், நீர்சத்து குறைபாடு ஏற்படும். மழைக்காலத்தில் வரும் நோய் தொற்றுகளை தடுக்க குழந்தைகள் அவசியம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
திருச்சி கருங்குளம் அரசு பள்ளியில் மாணவர்கள் நீர் அருந்த தண்ணீர் மணி அடிக்கப்படுகிறது. தினமும் 2 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க இந்த தண்ணீர் மணி அடிக்கப்படுகிறது. அப்போது அனைவரும் கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும். மாணவர்கள் உடல் நலத்திற்காக செய்யும் இந்த முயற்சியை எல்லா பள்ளிகளிலும் பின்பற்ற அரசாங்கம் ஏற்பாடு செய்தால் சிறப்பாக இருக்கும்.
திவ்யா சத்யராஜ்
ஆரோக்கியமான வாழ்வு வசதி உள்ளவர்களுக்கு மட்டும்தான் என்பது நியாயம் கிடையாது. நம் சுகாதார அமைப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை தர வேண்டும் . நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணராக இருப்பதால் என் கவனம் சுகாதார துறையின் மீது இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மற்ற துறைகளும் மேம்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றால் நாம் அந்த அமைப்பில் இருந்தால் தான் சாத்தியம்.
மேலும் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த திவ்யா, விரைவில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறது. அதை நோக்கி கள பணிகள் செய்து வருகிறேன். எந்த ஒரு ஜாதியை சார்ந்த கட்சியில் சேரும் எண்ணம் இல்லை. அரசியல் பற்றி தெளிவான முடிவு எடுத்துள்ளேன். ஆனால் இப்போது அதை வெளியிட வேண்டாம் என நினைக்கிறேன்.
ஒரு முக்கியமான விஷயம், ஒரு ஊட்டச்சத்து நிபுணராக என் வளர்ச்சிக்கு அப்பாவின் பெயரையும், புகழையும் உபயோகப்படுத்தினது இல்லை. அதேபோல் என் அரசியல் வளர்ச்சிக்காக அப்பாவின் புகழை பயன்படுத்தமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *