பலாக்காய் புளிக்குழம்பு,tamil samayal

ஆரோக்கிய சமையல்

 

 

பிஞ்சு பலாக்காய் (பெரியது) – ஒன்று
வெங்காயம் – 2
பூண்டு – 6 பல்
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
புளி – பெரிய எலுமிச்சை அளவு
தேங்காய் (சிறியது) – ஒன்று (துருவி வைக்கவும்)
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைக்க:
தேங்காய் துருவல் – அரை கப்
பூண்டு – 5 பல்
சோம்பு – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 கொத்து
தாளிக்க:
கடுகு – அரை தேக்கரண்டி
சோம்பு – அரை தேக்கரண்டி
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி

பலாக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியை கெட்டியாகக் கரைத்து வைக்கவும். தேங்காயை அரைத்து முக்கால் கப் முதல் பாலும், 2 கப் இரண்டாம் பாலும் எடுத்துக் கொள்ளவும்.

வறுத்து அரைக்க வேண்டியவற்றை சிவக்க வறுத்து, ஆற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பலாக்காய் துண்டுகளுடன் தூள் வகைகள், புளிக்கரைசல் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு குலுக்கிவிட்டுக் கலந்து உப்பு சரிபார்த்துக் கொள்ளவும். பிறகு அதனை குக்கரில் போட்டு இரண்டாம் தேங்காய்ப் பாலை ஊற்றி 3 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வதக்கவும்.

வதங்கியதும் வேக வைத்த பலாக்காயைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வேகவிடவும்.

குழம்பில் எண்ணெய் தெளிந்து வந்ததும், தேங்காய் விழுது மற்றும் முதல் தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

சுவையான பலாக்காய் புளிக்குழம்பு தயார்.

இந்தக் குழம்பு இலங்கையில் சிங்களவர்கள் மத்தியில் பிரபலமான ஒன்று. பச்சரிசி சாதம், ரொட்டியுடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

சிலர் தேங்காய் அரைத்துச் சேர்க்காமல், தேங்காய்ப் பால் மட்டும் சேர்த்துச் சமைப்பார்கள். இதனை முதல் நாள் இரவே மண் சட்டியில் போட்டு மண் அடுப்பில் வேக வைத்து அப்படியே அடுப்பின் சூட்டிலேயே வைத்து விடுவார்கள். மறுநாள் சமைத்து சாப்பிடும்போது, சுவை மிகவும் நன்றாக இருக்கும். (நேரமின்மையால் நான் குக்கரில் வேக வைத்துள்ளேன்).

தேங்காய்ப் பால் அதிகம் சேர்க்க விரும்பாதவர்கள் பலாக்காயை வேக வைக்கும் போது தண்ணீர் ஊற்றி வேக வைத்து, கடைசியாக முதல் தேங்காய்ப் பால் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *