‘நேசித்தால் பலன் கிட்டும்’

சினிமா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷைத் தேடி வந்துள்ளது பாலிவுட் பட வாய்ப்பு.

நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களாகவே அவரைத் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், “எந்த ஒரு வேலையையும் இது தரமானது, அது தரமற்றது என்ற எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் ரசித்துச் செய்தால் ஒவ்வொருவரும் அவரவரது வாழ்வில் வெற்றி அடைவது நிச்சயம்,” என்று கீர்த்தி அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

“நான் அணியும் உடைகள் அழகாக இருப்பதாகப் பலரும் சொல்கிறார்கள். அதற்கு ஆடை வடிவமைப்பில் எனக்கிருந்த ஆர்வம்தான் காரணம்.

“யார் எந்தத் தொழிலைச் செய்தாலும் அதை மனப்பூர்வமாக மகிழ்ச்சியோடு நேசித்துச் செய்தால் பலனுடன் மனமகிழ்ச்சியும் கிட்டும்.

“ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்தமான  தொழிலைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

“எனக்கு உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரங்களை விரும்பிச் செய்கிறேன். அதுமாதிரி வேடங்களையே தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்.

“தமிழ், தெலுங்கு சினிமாவில் திறமையான நடிகை என்று பெயர் வாங்கியுள்ள அதே வேைளயில் ஒரு நிலையான இடமும் கிடைத்துள்ளது.

“நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அவரை நம்பி படத்தை எடுக்கலாம். நிச்சயமாக சிறப்பாக நடித்துக் கொடுப்பார் என்ற பெயரும் வாங்கி இருக்கிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது.

“நான் தேர்வு செய்யும் படங்களில் யார் வேலை செய்கிறார்கள், கதை என்ன? எனது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பது உள்பட எல்லா விஷயங்களையும் கவனமாக கேட்ட பிறகே படத்தில் நடிப்பதற்கு ஒப் புக்கொள்கிறேன்.

“சினிமா எல்லோரும் சேர்ந்து போடும் உழைப்பினால் தான் வெற்றியடையும். படம் வெற்றி பெற்றதும் இது நாயகன் நாயகிக்கு மட்டும் கிடைத்த  வெற்றியாகப் பார்க்கக்கூடாது. மாறாக படக்குழுவினருக்கே கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கவேண்டும்.

“எல்லோரும் ஒரே எண்ணத்தோடு இணைந்து வேலை செய்தால்தான் வெற்றிபெற முடியும். வணிக ரீதியிலான படங்களிலும் நடிக்க ஆர்வம் உள்ளது,” என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

தமிழ், தெலுங்குப் படங்களுடன் இந்தி மொழி யிலும் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ், அமித் ஷர்மா இயக்கும் ‘மைதான்’ என்ற படத்தில் அஜய் தேவ்கான் ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தில் நடிப்பதற்காகத் தன் எடையைக் குறைத்துள்ள கீர்த்தி தனது படத்தை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார்.

கீர்த்தியின்  புகைப்படங்களை இன்ஸ்ட கிராம் பக்கத்தில் பார்த்த ரசிகர்கள் ‘நீங்களா இது?’ என்று வாயடைத்துப் போயுள்ளனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “காற்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. ஆகவே எடையைக் குறைத்தேன்,’’ என்றார்.

இதற்கிடையே கீர்த்தி சுரேஷ் ‘தலைவர் 168’ படத்திலும் நடிக்க உள்ளார்.

வரும் டிசம்பர் 12ல் ரஜினியின் பிறந்த நாளன்று ‘தலைவர் 168’ படத்தின் படப்       பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு ஜோடியாகவும் ஜோதிகா ரஜினிக்கு தங்கையாகவும் நடிக்கவுள்ளனர்.

குஷ்பு இந்தப் படத்தில் வில்லியாக நடிப்பார் என கூறப்படும்  நிலையில், மீனா இந்தப் படத்தில் இணைந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.   ஆனால் மீனாவின் பாத்திரம் தெரியவில்லை.

இந்தப் படத்தில் நடிக்கும் கதாநாயகிகளில் கீர்த்தி சுரேஷைத் தவிர்த்து மற்ற அனைவருமே ஏற்கெனவே ரஜினியோடு இணைந்து நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *