தலைமுடியை வெட்டிய இளம் நடிகருக்கு ரூ.7 கோடி அபராதம்

சினிமா

நடிகர் நடிகைகள் கதாபாத்திரங்களுக்காக தோற்றத்தை மாற்றுவது வழக்கம். இஷக், கும்பளங்கி நைட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மலையாள இளம் கதாநாயகன் ஷேன் நிகமை, வெயில் என்ற பெயரில் தயாராகும் மலையாள படத்தில் ஒப்பந்தம் செய்து கதாபாத்திரத்துக்காக தலைமுடியை நீளமாக வளர்க்கும்படி இயக்குனர் அறிவுறுத்தினார்.
படப்பிடிப்பு முடியும் வரை முடியை வெட்டக்கூடாது என்றும் கூறி இருந்தார். தலைமுடி நீளமாக வளர்ந்த பிறகு படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வந்தனர். இடையில் குர்பானி என்ற படத்தில் நடிக்கவும் ஷேன் நிகமை ஒப்பந்தம் செய்தனர். வெயில் படப்பிடிப்பு முடியாத நிலையில் குர்பானி படத்தில் நடிக்க தலைமுடியை வெட்டி விட்டார். புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். ஷேன் நிகம் மீது படத்தின் இயக்குனர் சரத் மற்றும் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் ஆகியோர் மலையாள நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்தனர்.
ஷேன் நிகம்
இந்த பிரச்சினை குறித்து ஆலோசிக்க மலையாள தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நிர்வாகிகள் ஷேன் நிகம் நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம். அவர் நடித்துவரும் வெயில், குர்பானி படங்கள் கைவிடப்படுகின்றன. அந்த படங்களுக்கு செலவழித்த ரூ.7 கோடியை ஷேன் நிகம் திரும்ப தர வேண்டும் என்று கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *