ஜெயலலிதா வேடத்தில் ரம்யாகிருஷ்ணன்…… ரசிகர்கள் வரவேற்பு

சினிமா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் பல இயக்குனர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பிரியதர்ஷினி இயக்கத்தில் தி அயர்ன் லேடி என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் படம் உருவாகிறது. இதில் ஜெயலலிதா கேரக்டரில் நித்யா மேனன் நடிக்கிறார்.
இதில் ஜெயலலிதா வேடத்தில் இருந்த நித்யா மேனன் தோற்றத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மதராசபட்டிணம், தெய்வத்திருமகள், தலைவா படங்களை இயக்கிய விஜய்யும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் படமாக்கி வருகிறார். இந்த படத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கணா ரனாவத் தோன்றும் காட்சிகள் வெளியாகின. ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா பொருத்தமற்றவர் என்று விமர்சனங்கள் எழுந்தன. இணையங்களில் கிண்டல்களும் பெருகின. அவரை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கையை குயின் எனும் வெப் சீரியலாக உருவாக்கியுள்ளார். இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.
ரம்யாகிருஷ்ணன், ஜெயலலிதா
ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் காட்சிகளை எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, கவுதம் மேனன் இயக்கி இருக்கிறார். சிறுவயது ஜெயலலிதா வேடத்தில் ‘விஸ்வாசம்‘ படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடிக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஜெயலலிதாவின் இளமைத் தோற்றத்தில் அஞ்சனா நடிக்கிறார்.
மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் எம்ஜிஆராக நடித்துள்ளார். எம்.எக்ஸ் பிளேயர் தயாரிக்கும் இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. 26 நொடிகள் கொண்ட அந்த டீசரில் ஜெயலலிதாவின் பள்ளி பருவம், திரை வாழ்க்கை, அரசியல் என அனைத்தும் இடம் பெற்றுள்ளது.
டிசம்பர் 5-ந் தேதி குயின் வெப்சீரிசின் டிரெய்லர் வெளியாகும் எனவும் டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக ஆறுமணி நேரம் ஓடக்கூடிய வெப் சீரிசாக படமாக்கி இருக்கிறார்கள். ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் தோற்றத்துக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *