‘சம்பவம்’ தலைப்புக்காக தொடங்கிய மோதல்

சினிமா

‘தளபதி 64’ படம் குறித்து அவ்வப்போது வெளியாகும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அப்படத்துக்கு ‘சம்பவம்’ என்ற தலைப்பு வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கூடவே சர்ச்சையும் முளைத்துள்ளது.

ரஜினியால் ‘பேட்ட’ மூலம் ‘சம்பவம்’ என்ற வார்த்தை பிரபலமானது. அதுவே தலைப்பாக அமைந்தால் நன்றாக இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் கூறி வந்த நிலையில், அந்தத் தலைப்பு தங்களுக்குச் சொந்தமானது என்று குரல் எழுப்பியுள்ளார் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்.

இவர் தற்போது நடிகர் ஸ்ரீகாந்த், நடன இயக்குநர் தினேஷ் ஆகிய இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்துக்குதான் ‘சம்பவம்’ என்று பெயர் வைத்துள்ளனராம்.

“இந்தத் தலைப்பை முறையாகப் பதிவு செய்த பிறகே படப்பிடிப்பைத் துவங்கினோம். தற்போது விஜய் சார் படத்துக்கும் இதே தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

“இந்தத் தலைப்பு எங்களுக்குச் சொந்தமானது. எனவே விஜய் சாருடன் இதைத் தொடர்புபடுத்தி வெளிவரும் தகவல்களை நம்ப வேண்டாம்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார் ரஞ்சித் பாரிஜாதம்.

இந்நிலையில் ‘சம்பவம்’ என்ற தலைப்பு விஜய்க்கும் பிடித்து விட்டதாம். எனவே அதன் உரிமையைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு படக்குழுவினரிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

நடிகர் ஸ்ரீகாந்த் முன்பு ‘நண்பன்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தவர். எனவே அவர் மூலம் தலைப்பைப் பெற முயற்சி நடப்பதாகத் தகவல்.

இதற்கிடையே ‘தளபதி 64’ படத்தில் விஜய் ஏற்றுள்ள கதாபாத்திரம் குறித்து குழப்பம் நீடிக்கிறது. கல்லூரிப் பேராசிரியராக நடிக்கிறார் என்றும் மாணவராக வருகிறார் என்றும் இருவேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘நீட்’ தேர்வு பிரச்சினையால் மாணவி அனிதா உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நடித்த ‘நம்மவர்’ படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது. ஆனால் எதையும் படக்குழுவினர் உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்திருப்பதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள ஒரு சிறைச்சாலையிலும் அதையொட்டி உள்ள பகுதிகளிலும் நடக்க உள்ளதாகவும் தகவல்.

இதற்கிடையே ‘தளபதி 64’ படத்தின் செயற்கைக்கோள் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதற்காகப் பெருந்தொகையைச் செலவிட்டுள்ளதாம் சன் நிறுவனம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 64’இல் மாளவிகா மோகன் நாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி, சாந்தனு ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க அந்தோணி வர்கீஷ், ஆன்ட்ரியா, ரம்யா  ஆகியோரும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *