கொள்ளையன் முருகனிடம் நகைகளை பரிசாக வாங்கி கொண்ட சிவகார்த்திகேயன் பட நடிகை… வழக்கில் புதிய திருப்பம்

சினிமா

தமிழகத்தை அதிரவைத்த நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான குற்றவாளி முருகன், விஜய், சிவகார்த்திகேயன் படங்களில் நடித்த முன்னணி நடிகைக்கு நகையை பரிசாக கொடுத்தது தெரியவந்துள்ளது.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ம் திகதி அதிகாலை சுவரில் துளைபோட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் கொள்ளையடித்து சென்றது.

இதில் ஏற்கனவே சுரேஷ் உள்ளிட்ட இரண்டு குற்றவாளிகள் கைதான நிலையில் முக்கிய குற்றவாளியான முருகன் பெங்களூர் பொலிசில் சரணடைந்தார்.

அவர் பெரம்பலூரில் உள்ள காட்டில் கொள்ளையடித்த நகைகளை புதைத்து வைத்திருந்த நிலையில் அவரை அழைத்து சென்ற பொலிசார் நகைகளை தோண்டி எடுத்தனர்.

இந்நிலையில் மூன்றாம் நாளான நேற்று சுரேஷ் பொலிசில் புதிய திடுக்கிடும் விடயங்களை வாக்குமூலமாக அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், எனது மாமா முருகன் என்னை கதாநாயகனாக வைத்து சினிமா படம் எடுக்க முடிவெடுத்த நிலையில் 2013-ம் ஆண்டு தெலுங்கில் ஆத்மா என்ற படத்தை எடுக்க தொடங்கினோம். 45 நாட்கள் சூட்டிங் நடந்த நிலையில் பைனான்ஸ் பிரச்சினையால் படம் பாதியில் நின்று விட்டது.

அதன்பிறகு தெலுங்கில் மான்சா என்ற படத்தை எடுத்தோம். அந்த படம் முழுவதுமாக எடுக்கப்பட்டது. கதாநாயகியாக நடித்த பிரபல நடிகைக்கு ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டது.

அதற்கு முன்பணமாக ரூ.6 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதி தொகையை கொடுக்க முடியாமல் போனதால், அந்த நடிகை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால், முழுவதுமாக படம் எடுத்து முடிக்கப்பட்டும் ரிலீஸ் ஆகவில்லை. தொடர்ந்து பைனான்ஸ் பிரச்சினை எழுந்ததால், மீண்டும் கொள்ளையடிக்க திட்டமிட்டோம்.

அதன்படி, திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சில மாதங்களுக்கு முன்பு சுவரில் துளை போட்டு நகைகள், பணத்தை முருகன் திட்டபடி கொள்ளையடித்தோம்.

பின்னர், மீண்டும் படம் எடுப்பதற்காக தமிழில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நாயகியாக நடித்து பல வெற்றிப்படங்களை தந்த பிரபல நடிகையை ஐதராபாத்தில் நானும், மாமா முருகனும் சந்தித்தோம். அவரிடம் கால்ஷீட் கேட்டபோது, தான் தற்போது பல படங்களில் நடித்து வருவதால் பிசியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அப்போது நாங்கள் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறோம் என்றோம். அவரும் ஆர்வமாக அப்படியா? என்றார். பின்னர் மாமா, வங்கியில் கொள்ளையடித்த நகை சிலவற்றை அந்த நடிகைக்கு பரிசாக வழங்கினார். அதை அந்த நடிகையும் மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டார். கொள்ளையடித்த பணத்தில் தமிழிலும், தெலுங்கிலும் பல நடிகைகளுடன் நானும், மாமாவும் உல்லாசமாக இருந்துள்ளோம் என கூறியுள்ளார்.

சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொள்ளாவிட்டாலும், முருகன் கொடுத்த நகைகளை பரிசாக பெற்ற அந்த பிரபல நடிகையிடம் பொலிசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

விஜய், சிவகார்த்திகேயன் உள்பட முன்னணி கதாநாயகர்களுடன் தமிழில் இந்த வாரிசு நடிகை நடித்துள்ளார்.

மேலும் சுரேஷ் கும்பலுடன் உல்லாசமாக தொடர்பில் இருந்த தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் குறித்தும் விசாரிக்க பொலிசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதனால், இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *