கொரோனா வைரஸ்: சக்திமான் முதல் மெட்டி ஒலி வரை – எந்த சீரியல் எப்போது ஒளிபரப்பாகிறது தெரியுமா?

சினிமா

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பலரும் பொழுதுபோக்கிற்காகத் தொலைக்காட்சியின் முன் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர். இந்த சமயத்தில் 90’ஸ் கிட்ஸ் `ஃபேவரைட்` தொடர்கள் பலவும் ரீவைண்ட் செய்யப்படுகிறது. இதனைப் பலரும் தங்களுடைய சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

சரி… எந்தெந்த சீரியல்கள் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது? அது ஒளிபரப்பு செய்யப்படும் நேரம் என்ன என்று பார்ப்போம்.

ராமாயணம் மற்றும் மகாபாரதம்:

ராமானந்த் சாகர் இயக்கிய ராமாயணத் தொடரும், பி.ஆர்.சோப்ரா இயக்கிய மகாபாரதத் தொடரும் கடந்த 28ஆம் தேதி முதல் ராமாயணம் தொடர் தினசரி காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு பகுதியும், இரவு 9 மணி முதல் 10 மணி வரை அடுத்த பகுதியும் ஒளிபரப்பப்படுகிறது. இதே போன்று நண்பகலில் மகாபாரதம் ஒளிபரப்பாகிறது.

மத்திய அமைச்சர்கள் கூட இந்த தொடர்களைப் பார்ப்பதாக ட்வீட் செய்து இருந்தனர்.

சக்திமான்:

90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் தொடர் ‘சக்திமான்’. அதுதான் இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ தொடர். சக்திமான் பலருடைய கனவு நாயகனாகவே வலம் வந்தார். 1997ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி ஒளிபரபாக ஆரம்பித்த இந்தத் தொடர் 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் ஒளிபரப்பப்பட்டது. ‘ பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி’ என்கிற ‘சக்திமான்’ கதாபாத்திரத்தில் முகேஷ் கண்ணா நடித்திருந்தார். இந்தத் தொடரின் தயாரிப்பாளரும் அவரே. சக்திமான் 520 எபிசோட்கள் வரை ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மற்ற தொலைக்காட்சிகளிலும் சக்திமான் ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில் இந்தத் தொடர் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தினசரி ஒரு மணி நேரம் மறு ஒளிபரப்பாக இருக்கிறது.

சாணக்யா :

சந்திரகுப்த மெளரிய அரசின் முதன்மை ஆலோசகராக இருந்தவர் சாணக்கியர். அவருடைய கதையை சொல்லும் நாடகத் தொடர் தான் இந்த ‘சாணக்யா’. கிட்டத்தட்ட 47 பகுதிகள் கொண்ட இந்த நாடகத் தொடர் 90களில் பிரபலமான தொடர்களுள் ஒன்று. இந்தத் தொடரும் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தினசரி ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது.

மெட்டி ஒலி :

சன் தொலைக்காட்சியில் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நெடுந்தொடர் ‘மெட்டிஒலி’. திருமுருகன் இயக்கிய இந்த நெடுந்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 3 :

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். கவின், சேரன், லாஸ்லியா, ஷெரின், அபிராமி, சாக்‌ஷி அகர்வால், சரவணன், சாண்டி, முகேன், தர்ஷன், மதுமிதா எனப் பல பட்டாளங்கள் கலந்து கொண்ட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நேற்று முதல் மாலை 6.30மணி அளவில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய டிஆர்பியை தக்க வைத்துக் கொள்வதற்காக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் ஆகியவற்றை மறு ஒளிபரப்பு செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *