கொரோனா குணமடைந்தவர்கள் மூலமும் வைரஸ் பரவும்! வெளியாகிய அதிரச்சி தகவல்

செய்தி

கொரோனா பாதித்தவர்களுக்கு, நோய்க்கான அறிகுறிகள் அனைத்தும் நீங்கிய பிறகும், வைரஸை பரப்புவதற்கான சாத்தியங்கள் இருப்பதால், குணமடைந்தவர்களையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என புதிய ஆய்வு கூறுகிறது.

பெய்ஜிங்கில் சீன ராணுவ மருத்துவமனையில், ஜனவரி 28 முதல் பிப்ரவரி 19ஆம் தேதி வரை சிகிச்சை பெற்ற, சராசரியாக 35 வயதுள்ள 19 பேரை, சீனா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள், கொரோனா தொற்றிய புதிதில் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம் ஆகிய அறிகுறிகளுடன் இருந்தவர்கள். வைரஸ் தொற்றி, 5 நாட்களில் இந்த அறிகுறிகள் வெளிப்பட்டுள்ளன. அவர்களுக்கு 8 நாட்கள் வரை இந்த அறிகுறிகள் இருந்துள்ளன. சிகிச்சைக்குப் பிறகு, தொடர்ந்து 2 சோதனைகளில் கொரோனா தொற்று நீங்கிவிட்டதாக முடிவு வந்து, குணமாகிவிட்டதாக வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அறிகுறிகள் முற்றாக நீங்கிய பிறகும் 1 முதல் 8 நாட்கள் வரை வைரசை பரப்பக்கூடியவர்களாக இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ அறிவியல் பத்திரிக்கையில் (American Journal of Respiratory and Critical Care Medicine) வெளியான இந்த ஆய்வு முடிவின்படி, கொரோனா அறிகுறிகள் நீங்கி, குணமாகி விட்டாலும் கூட, வைரஸ் முற்றாக நீங்குவதற்கு மேலும் காலஅவகாசம் தேவை.
எனவே, வீடு அல்லது மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், கொரோனா அறிகுறிகள் நீங்கினாலும், அதன் பிறகு மேலும் 2 வாரங்களுக்கு தனிமை நிலையில் இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், அதை மீறாமல் பார்த்துக் கொள்வதில் சிரமங்கள் இருப்பதோடு, பரிசோதனை செய்யப்படும் விகிதமும் குறைவாக உள்ளது.
எனவே, கொரோனா இந்தியாவில் எந்த அளவிற்கு பரவியுள்ளது என்பது தொடர்பாக போதிய விவரங்கள் இல்லை என பல வல்லுநர்கள் கருதுகின்றனர். எனவே புதிய ஆய்வு முடிவு இந்தியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதோடு, கட்டாயம் பின்பற்றப்பட வேண்டியது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *