குழந்தைகள் கடத்தலுக்கு, சமூக ஊடகம் இவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது! #GoodParenting

மருத்துவம்

உலகம் தொழில் புரட்சிக்குப் பிறகு சந்திக்கக்கூடிய மிக முக்கியமான மாற்றம் 90-களுக்குப் பிறகு நடைபெற்று இணையத்தின், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்பட்டு வருகிற புரட்சி. தொழில் புரட்சி நடைபெற மிக நீண்ட காலம் எடுத்துக்கொண்டாலும் இணையப் புரட்சி இரு பத்தாண்டுகளிலே மிகவும் பரவலாக அனைவரையும் சென்றடைந்துவிட்டது.

தொழில்நுட்பங்கள், இணையத்தின் வளர்ச்சி தடுக்க முடியாதது, தவிர்க்க முடியாதது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஒரு சமூகம் தன்னை தகவமைத்துக்கொள்ளவில்லை என்றால் உலக அரங்கில் பின்தங்கிவிடும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. உலகமே ஒரு நகரத்தைப்போல ஆகிவிட்டது எனக் கூறுகிற அளவுக்கு இன்று இணையத்தின் வளர்ச்சி அனைத்து தரப்பையும் ஒருங்கிணைத்திருக்கிறது. ஆனால், அதன் சாதகங்களோடு, சரி நிகரான பாதக அம்சங்களையும் உடன் சேர்த்தே வைத்துள்ளது.

வித்யா ரெட்டி

இணையத்தின் பாதகங்களால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் மிகவும் இளம் வயதைச் சேர்ந்தவர்களாகவே இருந்துவருகின்றனர். இதைப்பற்றித் துளிர் அமைப்பைச் சேர்ந்த வித்யா ரெட்டி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

தற்போது இந்தியாவில் இணையத்துக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக Internet deaddiction சென்டர்களும் பரவலாகி வருகின்றன.

குழந்தைகள்

“இன்று இணையம் அசூர வளர்ச்சி அடைந்துள்ள காலகட்டத்தில் குழந்தைகளை “டிஜிட்டல் குழந்தைகளாகவும்” பார்க்க வேண்டும். இணையத்துக்குள்ளே ஒரு தனி உலகமே இருந்து வருகிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்றைய காலகட்டத்தின் குழந்தைப் பருவத்தையே மாற்றி வருகிறது. அதன் வளர்ச்சி வேகத்துக்கு ஈடாகக் குழந்தைகளுக்கு எதிரான இணைய வழிக் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இணையத்தில் குழந்தைகளை மையப்படுத்தி இயங்கும் ஆபாச இணையதளங்களை வசிப்பவர்களுக்கும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் நேரடியான தொடர்பு இருப்பதாகவும் சமீபத்திய ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன.

முதலில், நிகழ்நேரத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத்தான் நாங்கள் அதிகமாகச் சந்தித்தோம். 2009-களுக்குப் பிறகு, இணையம் சார்ந்து நடைபெறுகிற குற்றங்கள் தொடர்பான தகவல்களும் எங்களுக்குக் கிடைத்தன. இன்று நாங்கள் சந்திக்கின்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானவற்றில் தொழில்நுட்பத்தின் பங்கு என்பது உள்ளது. நிகழ்நேரத்தில் நடைபெறுகிற குற்றங்கள் அனைத்துமே இணையத்திலும் நடைபெறுகின்றன. மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்கான drug deaddiction மையங்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். தற்போது இந்தியாவில் இணையத்துக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக Internet deaddiction சென்டர்களும் பரவலாகி வருகின்றன.

வீடுகளில் பெற்றோர்களுடன் சரியான உரையாடல்கள் இல்லாத குழந்தைகள்தாம் அதிக அளவில் இணையத்தை நாடுகின்றனர்.

பெரும்பாலும் குழந்தைகள் சந்திக்கின்ற முதல் விஷயம bullying தான். மாணவர்கள் மத்தியில் வகுப்புகளில் நடைபெறுவது வெளிப்படையாகத் தெரியவருவதற்கான சாத்தியங்கள் இருந்தாலும். இணையத்தில் நடைபெறுகிற bullying பெரும்பாலும் கவனம் பெறாமலே சென்றுவிடுகின்றன. தற்போது வளர்கிற குழந்தைகள் இணையத்துடன் சேர்ந்தே வளர்கின்றனர். குழந்தைகள் இணையம், சமூக ஊடகத்தில் இருப்பது என்பது ஒரு பெருமைபோலவே கருதுகின்றனர். இவ்வளவு நண்பர்கள் உள்ளார்கள், என் பதிவுக்கு இவ்வளவு லைக், கமென்ட்கள் கிடைக்கின்றன என்பது குழந்தைகளுக்கு மத்தியில் ஒரு போட்டியாகவே பார்க்கப்படுகிறது. அதனால்தான் அவர்கள் அறிமுகம் இல்லாத அந்நியர்களுடனும் பேச நேர்கிறது.

இணையம் என்பது தடையற்ற வாய்ப்புகளை வழங்கினாலும், அது ஆபத்துக்களையும் உள்ளடக்கியே வருகிறது. ஆனால், இந்தச் சிக்கல்களைப் புரிந்துகொள்வதில்தான் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருந்துவருகிறது. இணையம் என்பது தனி உலகமாக இயங்கிவருகிறது. ஆனால், அதில் உள்ள சிக்கல்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. நாங்கள் சந்திக்கிற நிறைய சம்பவங்களில் வீடுகளில் பெற்றோர்களுடன் சரியான உரையாடல்கள் இல்லாத குழந்தைகள்தாம் அதிக அளவில் இணையத்தை நாடுகின்றனர்.

தவறான பாலியல் நோக்கங்களுக்காக அனுப்பப்படுகிற ( sexting) குறுந்தகவல்களும் இணையத்தில் குழந்தைகளைக் குறிவைத்து அனுப்பப்படுகின்றன.

குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்களும் சமீப காலங்களில் இணையத்தில் தான் நடவடிக்கைகளை அதிகமாகக் கண்காணிக்கின்றனர். குழந்தை கடத்தல் வழக்குகளில் பலவற்றிலும் இணையத்தினுடைய பங்கும் உள்ளது. ஆபாசமான தகவல்களையும் குழந்தைகள் இணையத்தில் பெறுகின்றனர். தவறான பாலியல் நோக்கங்களுக்காக அனுப்பப்படுகிற (sexting) குறுந்தகவல்களும் இணையத்தில் குழந்தைகளைக் குறிவைத்து அனுப்பப்படுகின்றன. இணைய வழிக்குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் அதைப்பற்றித் தெளிவாக எதுவும் தெரியாமல் மாட்டிக்கொண்டவர்களே” என்கிறார் வித்யா.

இத்தகைய குற்றங்களைத் தவிர்ப்பதற்கான தீர்வுகளாக அவர் முன்வைப்பவை:

தங்களுடைய குழந்தைகளுடன் உரையாடி எந்த மாதிரியான தேவைகளுக்காக இணையத்தை, சமூக ஊடகங்களை நாடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

தடை செய்வது தீர்வல்ல

தொழில்நுட்பத்தை மறுப்பதோ, தடை செய்வதோ மட்டும் தீர்வு கிடையாது. இன்றைய குழந்தைகள் பல வழிகளிலும் அதைப் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர்கள் முதலில் செய்ய வேண்டியது தங்களுடைய குழந்தைகளுடன் உரையாடி எந்த மாதிரியான தேவைகளுக்காக இணையத்தை, சமூக ஊடகங்களை நாடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

சீரான கொள்கை வேண்டும்:

தொழில்நுட்ப நிறுவனங்களுமே குழந்தைகளுக்கென கட்டுப்பாடுகளுடன் கூடிய தனித்தளங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஆனால், அது தீர்வாக அமையாது. குழந்தைகளிடத்தில் இதைச் செய்யாதே எனச் சொன்னால் அதைத்தான் செய்வார்கள், குழந்தைகளுக்கென பிரத்யேக தளம் என்றால் அவர்கள் பொதுவான தளத்தை நோக்கித்தான் செல்வார்கள். பொதுவான தளத்தையே குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தொழில்நுட்ப நிறுவனங்களுமே ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றாற்போல கொள்கைகளை மாற்றியமைக்கக் கூடாது. அனைத்து நாடுகளுக்கும் பொதுவான கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும்.

பள்ளிக்கூடங்களில் உடற்பயிற்சிக்கென்று தனி வகுப்பும், ஆசிரியர்களும் இருப்பதைப்போல டிஜிட்டல் கல்வி வழங்குவதற்கான ஆசிரியர்களும் நியமிக்க வேண்டும்.

டிஜிட்டல் கல்வி:

இன்று பள்ளிக்கூடங்களில் உடற்பயிற்சிக்கென்று தனி வகுப்பும், ஆசிரியர்களும் இருப்பதைப் போல டிஜிட்டல் கல்வி வழங்குவதற்கான ஆசிரியர்களும் நியமிக்க வேண்டும். இதுதான் தற்போது அடிப்படையான தேவையாக உள்ளது. டிஜிட்டல் பயன்பாடுகள் பற்றிய கல்வியைப் பாடத்திட்டத்திலுமே இணைக்க வேண்டும். இணையத்தை எவ்வாறு பாதுகாப்பாக கையாளலாம் என்பதைப் பள்ளிகளில் இருந்தே குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.

தனித்துறை வேண்டும்:

ஆஸ்திரேலியா, பிரிட்டன் மாதிரியான நாடுகளில் டிஜிட்டல் பாதுகாப்புக்கென்று தனி துறைகளே உள்ளன. இணையப் பாதுகாப்புக்கான ஆணையர்கள் ( E-Safety Commissioners) எனத் தனி அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றன. எனவே இந்தியாவிலுமே கொள்கை அளவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட வேண்டும். இந்தியாவில் சட்டங்களுக்குப் போதாமையில்லை. ஆனால், அவற்றைச் செயல்படுத்துவதில் உள்ள தடைகளை, தாமதங்களைக் களைய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *