காதலருடன் சென்ற பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்: 4 வாலிபர்கள் கைது

சினிமா

 

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கோவையில் தற்போது பிளஸ்-1 மாணவியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து செல்போனில் போட்டோ எடுத்து மிரட்டிய அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவி கடந்த 26-ந் தேதி தனது காதலரின் பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் 2 பேரும் சீரநாயக்கன்பாளையம் ஐஸ்வரியா நகரில் உள்ள பூங்காவுக்கு சென்றனர்.

பின்னர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது இவர்களை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் 2 பேரையும் மிரட்டி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து மாணவியின் காதலனை மிரட்டி, ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். பின்னர் அவரை தாக்கினர், இதில் அவர் மயங்கினார்.

பின்னர் அந்த கும்பல் மாணவியை மிரட்டி நிர்வாணமாக்கி அங்குள்ள மறைவிடத்துக்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதனை தங்களது செல்போனில் பதிவு செய்தனர். மேலும் நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர். இதில் சோர்வுடன் காணப்பட்ட மாணவியை அவரது காதலன் தனது வீட்டுக்கு அழைத்து சென்று தங்க வைத்தார்.

மறுநாள் மாலை வீட்டுக்கு திரும்பிய மாணவி நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறி கதறி அழுதார்.

பின்னர் இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 6 பேர் மீது போக்சோ சட்டம், பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
கைது

நேற்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேரை இன்ஸ்பெக்டர் பிரபா தேவி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராகுல் (வயது 21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயண மூர்த்தி (32) என்பது தெரிய வந்தது.

பின்னர் 4 பேரையும் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மணிகண்டன் உள்பட 2 பேரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.

பிளஸ்-1 மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *