கணவனை இழந்த பெண்களை குறிவைத்தேன்.. கோடிகளில் புரண்ட நபரின் பகீர் வாக்குமூலம்

சினிமா

தமிழகத்தில் திருமணம் செய்வதாக கூறி 9 பெண்களை ஏமாற்றி பல கோடிகளை சுருட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நபர் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (34). இவர் 35 வயதை தாண்டி திருமணத்துக்கு ஏங்கி நிற்கும் பெண்கள், இளம் வயதிலேயே கணவனை இழந்து அடுத்த வாழ்க்கையை தேடும் பெண்கள் போன்றவர்களை திருமண இணையதளம் வழியாக கடந்த 2012-ல் இருந்து தேடிப்பிடித்து ஏமாற்றி வந்துள்ளார்.

இவரது வலையில் 9 பெண்கள் சிக்கியதோடு, தங்களிடம் இருந்த செல்வத்தையும் இவருக்கு வாரி வழங்கியிருக்கிறார்கள்

9 பெண்களை தனது வலையில் வீழ்த்திய சக்ரவர்த்தியும் எம்.இ பட்டதாரி ஆவார். இவர், தன்னை காண்டிராக்டர் என்று இணையதளத்தில் அறிமுகப்படுத்தி வலம் வந்துள்ளார். 9 பெண்களை ஏமாற்றினாலும் கடந்த 2017-ம் ஆண்டு ஏமாந்த பெண்களில் ஒருவரை முறையாக திருமணம் செய்துள்ளார்.

திருவண்ணாமலையை சேர்ந்த அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தை உள்ளது. இவரது மோசடி லீலைகளை தெரிந்துகொண்டு அந்த பெண் தனது குழந்தையுடன் இவரை உதறி தள்ளிவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

ஏற்கனவே மதுரையில் 2 பெண்கள் கொடுத்த புகாரில் கைதாகி மதுரை சிறையில் சில காலம் இருந்துள்ளார்.

தற்போது கடைசியாக இவர் விரித்த வலையில் சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்த பெண் டாக்டர் விழுந்துள்ளார். அவருக்கு 38 வயதாகிறது.

இவர் திருமணத்துக்கு ஏங்குவதை இணையதளம் வாயிலாக தெரிந்துகொண்ட சக்ரவர்த்தி, இவரை தொடர்புகொண்டார்.

சக்ரவர்த்தியின் மயக்கும் பேச்சில் மனதை பறிகொடுத்தார். தாலி கட்டும் முன்பே கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து சக்ரவர்த்தியுடன் முதலிரவையும் கொண்டாடினார்.

தன்னிடம் இருந்த ரூ.7 கோடி பணத்தையும் வள்ளலாக வாரி வழங்கினார் அந்த பெண் டாக்டர். அந்த பெண் டாக்டர் கொடுத்த கோடிகளை பயன்படுத்தி சக்ரவர்த்தி திருவண்ணாமலையில் 3 மாடிகளை கொண்ட பிரமாண்ட வீடு ஒன்றை கட்டினார். சென்னையிலும் 3 வீடுகள் வாங்கினார்.

3 சொகுசு கார்களுக்கும் சொந்தக்காரர் ஆனார். சக்ரவர்த்தி மீதான மயக்கத்தில் அத்தனை சொத்துகளையும் அவர் பெயருக்கே பெண் டாக்டர் எழுதிகொடுத்ததாக தெரிகிறது.

பின்னர் பெண் டாக்டரை கழற்றிவிட்ட சக்ரவர்த்தி, கும்பகோணத்தில் ஒரு பெண் என்ஜினீயரை வலை வீசி பிடித்தார். அந்த பெண் என்ஜினீயரையும் திருமணம் செய்வதாக கூறி ரூ.1.30 கோடி பணத்தை சுருட்டினார். மொத்தம் 9 பெண்களிடமும் ரூ.9 கோடியை சுருட்டி உல்லாச சக்ரவர்த்தியாக வலம் வந்தார்.

இந்தநிலையில் சென்னை பெண் டாக்டர் பொலிஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து மோசடி ராஜா சக்ரவர்த்தி மீது புகார் கொடுத்தார். இதன் பேரில் பொலிசார் சக்கரவர்த்தியை கைது செய்தனர்.

பெண்களிடம் திருமண ஆசைகாட்டி அபகரித்த பணத்தில் சக்ரவர்த்தி வாங்கிப்போட்ட சொத்துகள் தற்போது ரூ.10 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், சென்னை குரோம்பேட்டையில் நான் தங்கியிருந்தபோது அரசு அதிகாரி ஒருவர் தான் இணையதளம் வாயிலாக பெண்களை பார்த்து மோசடி செய்யும் திட்டத்தை எனக்கு வகுத்து கொடுத்தார்.

அவர் தான் எனக்கு இந்த தொழிலில் குரு. அவர் சொன்ன ஆலோசனைப்படி மதுரையில் 2 பெண் என்ஜினீயர்களை ஏமாற்றினேன். ஒருவரிடம் ரூ.30 லட்சமும், இன்னொருவரிடம் ரூ.70 லட்சமும் சுருட்டினேன். பின்னர் அதுவே எனக்கு தொழிலாகி போனது.

என்னிடம் ஏமாந்தவர்களில் 4 பெண்கள் மட்டுமே பொலிசில் புகார் கொடுத்தனர். மற்றவர்கள் எல்லாம் திருமணம் செய்துகொண்டு நல்லபடியாக வாழ்கிறார்கள். அவர்கள் என்மீது புகார் கொடுக்கவில்லை. இந்த வழக்குகளில் இருந்து விடுபட்டு வந்தவுடன் எனது மனைவியை சந்தித்து மீண்டும் புது வாழ்க்கையை தொடங்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *