இலங்கையில் தமிழ்ப் பெண்கள் பொட்டு வைக்கத் தடை என பரவும் தகவல்

சினிமா

இலங்கையில் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிப்போருக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவலுக்கு அந்நாட்டு குடிநுழைவுத் துறை பதிலளித்து உள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் நெற்றியில் பொட்டு வைத்தவாறு உள்ள புகைப்படத்தைத் தவிர்க்க வேண்டும் என குடிநுழைவுத் துறை கேட்டுக்கொண்டு உள்ளதாகவும் தமிழ்ப் பெண்களைக் குறிவைத்து அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு  இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.

அது குறித்து பிபிசி செய்தியிடம் பேசிய இலங்கை குடிநுழைவுத் துறை பேச்சாளர் கயன் மிலிந்த, பாஸ்போர்ட்டுக்கான புகைப்படத்தில் பொட்டு வைத்தவாறு இருந்தால் அது அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பின் விதிமுறைகளுக்கு முரணானது என்றார்.

பாஸ்போர்ட்டுக்காக புகைப்படம் எடுக்கும்போது முகத்தில் ஒப்பனையோ, வேறு எந்த மாற்றமோ இல்லாதவாறு இருக்க வேண்டும் என்பது விதிமுறை என்று கூறிய அவர், முகத்தில் செயற்கை மாற்றங்களை ஏற்படுத்தி எடுக்கப்படும் புகைப்படங்களை தமது அலுவலகக் கணினி கட்டமைப்பு தானாகவே நிராகரித்துவிடும் என்றார்.

ஆனால் இந்த விதிமுறைகளுடன் கூடிய புதிய சட்டங்கள் 2015ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் தமிழ்ப் பெண்களை இலக்காக வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல இது என்றும் கயன் மிலிந்த தெரிவித்துள்ளார்.

ஆனால் சமூக ஊடகங்களில் பரவிய தகவலை அடிப்படையாகக் கொண்டு பிபிசியிடம் கருத்து கூறிய இலங்கை முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த வாணி என்பவர் கோபத்தில் கொந்தளித்தார்.

“திருமணமான பெண் என்ற விதத்தில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். நெற்றியில் குங்குமம் இட்டுக்கொள்வது என்பது எமது கலாசாரம்; எமது பாரம்பரியம். புதிய நடவடிக்கை எம்மை அவமதிப்பதாக உள்ளது,” என்றார்.

பெண்கள் நல சமூக ஆர்வலர் நளினி ரத்னராஜா என்பவர் கூறுகையில், “பெண்களின் உடைகள், உடல்,  கலாசாரத்தில் அரசு தனது கொள்கைகளையும் சட்டங்களையும் கொண்டு வந்து கட்டுப்பாடு விதிப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன். ஹிஜாப் போட வேண்டாம் என்றும் பொட்டு வைக்க வேண்டாம் என்றும் சொல்லப்படும் விவகாரங்கள் அனைத்தும் பெண்களையே குறி வைக்கின்றன,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *