இறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)

ஆரோக்கிய சமையல்

தேவையான பொருட்கள்
1 கிலோ இறால் – சுத்தம் செய்து கழுவியது
15 கிராம் செத்தல்
15கி கொத்தமல்லி
1தேக மிளகு
1 தேக சின்னச்சீரகம்
2 பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் தேவைக்கு ஏற்ப
10 – 15 உள்ளிகள்
25 கிராம் விதைகள் நீக்கிய புளி
3 மேகரண்டி தக்காளிச் சாறு அல்லது 1-2 தக்காளி ( அவசியமானதல்ல, விரும்பியவர்கள் சேர்க்கவும்).
1/2 முடி தேங்காயின் பால்
கருவேப்பிலை தேவைக்கு ஏற்ப
உப்பு தேவைக்கு ஏற்ப.

முதலில் ஒரு சட்டியில் மல்லி, மிளகைப் போட்டு வறுக்கவும். அது நன்றாக சூடேறிய பின்பு அடுப்பில் இருந்து இறக்கி வைத்து அதில் உள்ள சூட்டில் செத்தல், சின்னச் சீரகம் சேர்த்து வறுக்கவும். உறைப்பு குறைவாக விரும்புகின்றவர்கள் 10 செத்தல் மிளகாயைப் பாவிக்கவும். 15 கிராம் அளவிற்கு கிட்டத்தட்ட 16 செத்தல் வரும்.

வறுத்த பொருட்களை ஆறவிட்டு இயந்திரத்தில் அல்லது அம்மியில் அரைத்து எடுக்கவும். பின்பு அதனுடன் உள்ளி, சிறிது நீர் சேர்த்து நல்ல பசையாக அரைத்து எடுக்கவும்.

அரைத்தெடுத்த கறிக் கூட்டுக் கலவை.

பின்பு கறி வைக்கும் பாத்திரத்தில் வெட்டிய வெங்காயம், தக்காளிச் சாறு, சிறிது கருவேப்பிலை, அரைத்த கறிக் கூடு, 25 கிராம் புளியைக் கரைத்தெடுத்த புளித் தண்ணீர், இரண்டாம் தேங்காய்ப் பால் இவற்றைப் போட்டு அடுப்பில் வைத்து காய்ச்சவும்.

நன்றாக கொதித்து வெங்காயம் அவிந்த பின்பு முதலாவது தேங்காய்ப்பால், இறால், தேவையான அளவு உப்பு என்பவற்றைச் சேர்த்து கொதித்து அவியவிடவும்.

கறி கொதித்து தடிப்பாக, அடர்த்தியானதாக வரும் பொழுது மீதமுள்ள கருவேப்பிலையை போட்டுக் கிளறி அடுப்பின் சூட்டை நிறுத்தி மேலும் சிறிது நேரம் அடுப்பின் சூட்டினில் வைத்திருந்து இறக்கவும்.

அரைத்து வைத்த இறால் குழம்பு தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *