ஆங்கில புத்தாண்டு 2018 பலன்கள்…… 2018,new year rasipalan 2018

ஜோதிடம்

 

 

2017ஆம் ஆண்டு முடிந்து 2018ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. மேஷம் முதல் மீனம் வரை ஆங்கிலப்புத்தாண்டு பலன்கள் எப்படியிருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

ஆங்கில புத்தாண்டு மிதுனம் ராசி மிருகசிரீடம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. கன்னி லக்னம் இரண்டாம் இடமான துலாமில் குரு, செவ்வாய் 3ஆம் இடமான விருச்சிகத்தில் புதன். தனுசு ராசியில் சூரியன்,சனி, சுக்கிரன், மகரத்தில் கேது, கடகத்தில் ராகு என கிரகங்கள் அமர்ந்துள்ளன. 2018ஆம் ஆண்டு சனி, ராகு, கேது கிரகங்கள் அதே நிலையில்தான் அமர்ந்திருக்கும். குரு பெயர்ச்சி அக்டோபர் 18ஆம் தேதி நிகழ உள்ளது. இதை வைத்தும், சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகிய கோள்களின் கிரக பெயர்ச்சியை வைத்தும் பலன்கள் கணிக்கப்பட்டுள்ளது.

மேஷம்

பாசத்திற்கும் அன்புக்கும் அடிபணியும் மேஷ ராசிக்காரர்களே! நீங்க பாசத்திற்கு முன்னாடி பனியாக இருந்தாலும் பகை என்று வந்தால் புலியாக மாறி விடுவீர்கள். காரணம் உங்கள் ராசி நாதன் செவ்வாய் பகவான்தான். மனித நேயம் கொண்ட நீங்கள், உடல் உழைப்பில் சூரப்புலி. சாதனையாளராக திகழும் உங்களுக்கு இருந்த கஷ்ட காலம் கடந்த ஆண்டோடு கடந்து விட்டது. 2018 இனி பொற்காலமாக அமையப்போகிறது. ராசிநாதன் செவ்வாய் பகவானால் தைரியம் அதிகரிக்கும். எடுத்துக்கொண்ட காரியத்தில் அயராது பாடுபட்டு முன்னேற்றம் அடைவீர்கள். 7ஆம் இடத்தில் அமர்ந்துள்ள குருபகவானால் குதூகலம்தான். உங்களுக்கு பதவி உயர்வோடு, சம்பளமும் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்புகள் கைகூடி வரும். 9ஆம் இடத்தில் அமர்ந்துள்ள சனிபகவானால் வெளி வட்டார நட்பு சிறப்பாக அமையும். பாஸ்போர்ட், விசாவில் இருந்த சிக்கல்கள் தீரும். விமானம், கப்பல்கள் மூலம் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ராசி அதிபதி செவ்வாய் வருடத்தின் மத்தியில் ஆரம்பித்து இறுதி வரைக்கும் 10ஆம் வீடான மகரத்தில் கேதுவுடன் இணைகிறார் இது ராசிநாதனுக்கு உச்ச வீடு என்பதால் நன்மைகள் அதிகரிக்கும். புற்றுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வணங்கி வர நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்

அன்பும் அழகுணர்ச்சியும் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே… 2018ஆம் புத்தாண்டு கிரக அமைப்புப்படி பார்த்தால் உங்கள் ராசிக்கு 3ஆம் இடமான கடகத்தில் ராகு, 6ஆம் இடமான துலாம் ராசியில் குரு, 8ஆம் இடமான தனுசில் சனி பகவான், 9ஆம் இடமான மகரத்தில் கேது என கிரகங்கள் அமைந்துள்ளன. சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மற்றவர்களை கவரும் ஆற்றல் கொண்டவர். ராகு பகவான் 3ல் இருக்கிறார். எதிர் நீச்சல் போட வேண்டிய ஆண்டு. ராசிக்கு 3ஆம் இடத்தில் அமர்ந்துள்ள ராகுவினால் சகோதரர்களால் நன்மை, உறவினர்களால் நன்மை ஏற்படும். சில நேரங்களில் பிரச்சினைகள். சந்திரனுடன் ராகு இணைந்து சஞ்சாரம் செய்வதால் அடிக்கடி பயணம் ஏற்படும். ராசிக்கு 9ஆம் அதிபதி 8ல் அமர்ந்துள்ளதால் வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். 10ஆம் அதிபதி சனி பகவான் 8ல் அமர்ந்துள்ளதால் பள்ளி மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்கவும். அரசு வேலை வாய்ப்பு தேர்வு எழுதுபவர்கள் கவனமாக படிக்க வேண்டும். ராசிக்கு 12ஆம் அதிபதியான செவ்வாயினால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.தன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்கி வரலாம். ஏழைகளுக்கு உதவுங்கள்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களே 2018 ஆம் ஆண்டில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செய்யும் தொழிலில் கவனம் தேவை. 7ஆம் இட சனியால் சில சோதனைகள் வரலாம். அதை சாதனையாக மாற்ற வேண்டியது உங்கள் கைகளில்தான் உள்ளது. கூட்டுத்தொழிலில் நேரடி கவனம் தேவை. இந்த ஆண்டு சுப செலவுகள் அதிகரிக்கும். 5ஆம் இடத்தில் குருபகவான் இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். அதை முறையாக முதலீடு செய்ய வேண்டும். மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிக்க கல்வி வாய்ப்பு வரும். வாகனங்களில் செல்லும் போது கவனம். சிறுசிறு உடல் உபாதைகள் வரும். வியாழக்கிழமை மகான்களின் ஆலயங்களுக்கு சென்று வணங்கலாம்.

கடகம்

கடகம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 6ஆம் வீட்டில் சனி, 4ஆம் வீட்டில் குரு பகவான், ஜென்மத்தில் ராகு மற்றும் 7ஆம் வீட்டில் கேது சஞ்சரிக்கிறார்கள். 2018 ஆம் ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். 4ஆம் இட குரு பஞ்சம ஸ்தானமாகிய 5 ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பது சிறப்பான அம்சமாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு ஆண்டின் இறுதியில் திருமண சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் எல்லாத் தேவைகளும் நிறைவாகப் பூர்த்தியாகும். தம்பதியரிடையை ஒற்றுமை நிலவும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். காது, மூக்கு, தொண்டைகளில் வரும் பிரச்சினைகளை கவனியுங்கள். செவ்வாய்கிழமை முருகனை வணங்கி வர இன்னல்கள் தீரும். சிம்மம் அனைத்திலும் முதன்மையானவர்களாக திகழும்

சிம்மம் 

புத்தாண்டு பிறக்கும் போது உங்கள் ராசி நாதன் சூரியன் தனுசு ராசியில் சனியோடு கூடவே சுக்கிரனோடும் சேர்ந்திருக்கிறார். இது சாதகமற்ற அம்சம்தான். அரசு வேலைக்கான தேர்வுகள் எழுதுபவர்கள் அவசரப் படவேண்டாம். திருமணத்திற்காக முயற்சிகளை மேற்கொண்டால் தடைகளுக்குப் பின்பே வெற்றி கிடைக்கும். சூரியன் சனி சேர்க்கையினால் செலவுகள் அதிகரிக்கும்.12ஆம் வீட்டில் உள்ள ராகுவினால் வண்டி வாகனங்கள் மற்றும் வீடு, மனையை புதுப்பிப்பதற்காக செலவுகளைச் செய்ய நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகளும் சங்கடங்களும் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். சனிக்கிழமை பிள்ளையாருக்கு அருகம் புல் மாலை சாற்றி வணங்கவும்.

கன்னி

சோதனைகளை சாதனைகளாக மாற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவான் தனஸ்தானமான 2ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். 2018ஆம் ஆண்டில் நீங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய யுக்திகளைக் கையாளக் கூடிய வாய்ப்பும் ஏற்படும். ஜென்ம ராசிக்கு குரு 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் திருமண வயதை எட்டியவர்களுக்கு மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமையும் நிம்மதியும் சிறக்கும். 1.10.2018 முதல் குரு 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஆண்டின் இறுதியில் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. ராகு 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் குறைந்து லாபமும் அபிவிருத்தியும் பெருகக் கூடிய அமைப்பு கொடுக்கும். 2018ஆம் ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுகிறது. இதனால் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும். தினமும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

துலாம்

மகிழ்ச்சியோ… துக்கமோ… ஒரே மாதிரியாக தராசு தட்டில் வைத்துப்பார்க்கும் துலாம் ராசி நேயர்களே! குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. 11.10.2018 முதல் குருபகவான் தன ஸ்தானமான 2ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் திருமண சுபகாரியங்கள் நடைபெறும். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். நல்ல முயற்சியுடன் பாடுபட்டால் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும்.

விருச்சிகம்

அன்பால் பிறரை கட்டிப்போட்டு அதிகாரம் செய்யக்கூடிய விருச்சிகம் ராசி நேயர்களே… 2018ஆம் ஆண்டு உங்களுடைய ஜென்ம ராசிக்கு குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதால் ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதும், ஆண்டின் தொடக்கத்தில் குரு ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12ல் சஞ்சரிப்பதும், அக்டோபர் 11 முதல் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய இருப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். ஏழரை சனி காலம் பாத சனியாக தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படும். ராகு கேதுவின் சஞ்சாரத்தினால் உங்களுக்கு நன்மையை தரும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். வீடு, மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள்

தனுசு

நேர்மையும், உண்மையும் கொண்ட தனுசு ராசிக்காரர்களே… 2018ஆம் ஆண்டில் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச்சனியாக தொடருகிறது. சூரியன், சனி, சுக்கிரன் உங்கள் ராசியில் வருட ஆரம்பத்தில் அமர்ந்துள்ளனர். இது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை. 2ஆம் வீட்டில் கேது, 8ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் உத்தமம். இந்த ஆண்டில் ராசியாதிபதியும் தன காரகனுமான குரு பகவான் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அக்டோபரில் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு விரய ஸ்தானமான 12ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பணவிஷயத்தில் சற்று கவனமுடனிருப்பது மிகவும் நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு குரு மாற்றத்திற்குப் பிறகு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். சுப விரையமாக மாற்றிக்கொள்ளவும். சனிக்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வம் சாற்றி வணங்கவும்.

மகரம்

2018ஆம் ஆண்டில் உங்கள் ராசியாதிபதி சனிபகவான் விரய ஸ்தானமான 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச்சனி தொடங்குகிறது. செலவுகளை சுப செலவுகளாக மாற்றவும். குருபகவான் உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த ஆண்டின் முற்பாதியில் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவதே நல்லது. அக்டோபர் முதல் லாப ஸ்தானத்தில் 11ஆம் வீட்டில் குரு சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் குறையும். ஜென்ம ராசியில் கேது, 7ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். ஞாயிறன்று காலபைரவரை வணங்கினால் நன்மைகள் நடக்கும்.

கும்பம்

சனி கிரகத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் கும்ப ராசிக்காரர்களே, இந்த வருடம் உங்களுக்கு எல்லா விதத்திலும் சிறந்தது. சனி 11இல், கேது 12இல், ராகு 6இல் மற்றும் குரு 9ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாம் உங்களுக்கு நன்மையாய் முடியும். வெகு தூர பிரயாணம் உங்களுக்கு சாதகமாக அமையும். 2018ஆம் ஆண்டில் வாழ்க்கையை உற்சாகமாக அனுபவிப்பீர்கள். எதிர்ப்புகளும், தடைகளும் உங்களை அசைக்க முடியாது. கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் வீடு, மனை, வண்டி வாகனம் போன்றவை வாங்கும் யோகமும் அமையும். புற்றுள்ள அம்மன் கோவிலுக்கு புதன்கிழமைகளில் சென்று வழிபடுங்கள்.

மீனம்

நீதியும், நேர்மையும் கொண்ட மீன ராசிக்காரர்களே… உங்கள் ராசி அதிபதி குருபகவான் 8ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். அக்டோபர் 11ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு குரு பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதால் ஆரோக்கிய ரீதியாக உள்ள பாதிப்புகள் குறைந்து மன நிம்மதி உண்டாகும். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். கெட்டதிலும் ஒரு நன்மையாக கேது 11ல் சஞ்சரிப்பதால் பெரிய கெடுதல்கள் ஏற்படாது எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து சென்றால் நன்மையே நடக்கும். திங்கட்கிழமையன்று சிவ ஆலயம் சென்று நெய் தீபம் ஏற்றி வணங்கி வர நன்மையே நடக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *