அமைந்தது எல்லாம் ஒருதலைக் காதல்தான்

சினிமா

தமிழில் சத்தமில்லாமல் அறிமுகமாகியுள்ளார் இளம் நாயகி ராஷ்மிகா மந்தனா. கார்த்தி நாயகனாக நடிக்கும் தலைப்பிடப்படாத படத்தில் இவர்தான் கதாநாயகி.

‘ரெமோ’ பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை என்றாலும் படப்பிடிப்புக்கு முந்திய ஒத்திகை, சில ஏற்பாடுகள் எல்லாம் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றனவாம்.

“நேரடி தமிழ்ப் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் அழகான ஒரு கதாபாத்திரத்தைத் தந்திருக்கிறார் பாக்யராஜ் கண்ணன் சார். அதனால் உற்சாகமாக இருக்கிறேன்,” என்று முகம் நிறைந்த புன்னகையுடன் பேசுகிறார் ராஷ்மிகா.

தமிழில் அறிமுகமாவதால் தமிழ் பேச பயிற்சி மேற்கொண்டுள்ளாராம். அதனால் சுமாராகப் பேச முடிகிறது என்கிறார்.

“உண்மையைச் சொல்ல வேண்டுமானால், கன்னடப் பெண்ணான எனக்கு அந்த  மொழியிலேயே வேகமாகப் பேச வராது.

“குறிப்பாக, ஆங்கிலத்தை விட தமிழில் ஓரளவு நன்றாகப் பேசுகிறேன்.

“நான் பிறந்தது கர்நாடகாவில் என்றாலும் பள்ளியில் முதலாம் வகுப்பு என்பது சென்னையில்தான் அமைந்தது.

“எனக்கு ஐந்து வயதாகும்போது அப்பா சென்னையில்தான் வேலை பார்த்தார். சுமார் 3 ஆண்டுகள் இங்கே இருந்தபோது வாழ்க்கை அவ்வளவு சுவாரசியமாக இருந்தது. அந்த நாட்கள் இனிமையானவை,” என்று சொல்லும் ராஷ்மிகா, மனோதத்துவம், ஊடகத் துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. அதன் பிறகு சினிமா வாய்ப்பும் தேடி வர, தற்போது கார்த்தியுடன் ஜோடி சேரும் அளவுக்கு எல்லாம் மளமளவென நடந்திருக்கிறது.

தெலுங்கில் இவர் நடித்த ‘டியர் காம்ரேட்’ வசூலில் அசத்தியதை அடுத்து அங்கு முன்னணி நடிகையாக உருவெடுத்து வருகிறார். தற்போது கன்னடம், தெலுங்கு, தமிழ் என மும்மொழிகளில் இவருக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம்.

யாரையேனும் காதலித்த அனுபவம் உண்டா? என்று  கேட்டால் கொஞ்சம்கூடத் தயங்காமல் பதிலளிக்கிறார்.

“கடந்த இரண்டாண்டுகளாக நான் தனிமரம்தான். உடனே அதற்கு முன்பு யாரைக் காதலித்தீர்கள்? என்று  கேட்காதீர்கள். என்னிடம் நிறைய காதல் கதைகள் உண்டு. ஆனால், அனைத்துமே ஒருதலைக் காதலாக அமைந்ததுதான் சோகம்.

“ஒருவேளை யாரும் என்னை விரும்பவில்லை போலும். பொதுவாக ஓர் இளையரிடம் நான் நிறைய நல்ல குணாதிசயங்களை எதிர்பார்ப்பேன். அவர் என்னைப்போல் அல்லாமல் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு.

“சிரித்த முகமாக, தைரியசாலியாக, நகைச்சுவை உணர்வுடன் இருக்கும் இளைஞரைத்தான் எனக்குப் பிடிக்கும். அப்படி ஒருவர் அமைந்தால் காதலிப்பது குறித்து யோசிக்க வாய்ப்புண்டு. எனினும் காதலிக்கும் விஷயத்தில் நிச்சயம் அவசரப்படமாட்டேன்,” என்கிறார் ராஷ்மிகா மந்தனா.

தமிழ்ப் படங்கள் பார்ப்பது என்றால் இவருக்கு ரொம்பவே ஆர்வமாம். பார்த்த படங்கள், பார்க்க வேண்டிய படங்கள் என்று ஒரு பெரிய பட்டியலே வைத்துள்ளார்.

சாய்பல்லவி, திரிஷா, சமந்தா ஆகியோரின் நடிப்பு ரொம்பப் பிடிக்குமாம். எனினும் தனக்கென ஒரு தனி பாணியைப் பின்பற்றி நடித்து வருவதாகச் சொல்கிறார்.

“கார்த்தியுடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு தமிழ் ரசிகர்கள் என்னை நன்கு அடையாளம் கண்டுகொள்வர் என நம்புகிறேன். அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

“நல்ல கதையும் கதாபாத்திரமும் அமையும்போது மற்ற விஷயங்கள் குறித்து நான் அதிகம் யோசிப்பதில்லை.

“என்னைப் பொறுத்தவரை நான் நடிக்கும் அனைத்து மொழிகளிலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாக உள்ளது,” என்கிறார் ராஷ்மிகா.

கார்த்தியுடன் இவர் நடிக்கும் படத்துக்கு ‘சுல்தான்’ என தலைப்பு வைத்திருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்தத் தலைப்பை மாற்ற படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *